சட்டசபை தேர்தல்; குஜராத்துக்கு கெஜ்ரிவால் நாளை மறுநாள் மீண்டும் சுற்றுப்பயணம்

குஜராத்தில், சட்டசபை தேர்தலை முன்னிட்டு தீவிர தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக நாளை மறுநாள் கெஜ்ரிவால் மீண்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

Update: 2022-07-24 08:39 GMT



புதுடெல்லி,



குஜராத்தில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பா.ஜ.க. நீண்டகாலம் ஆட்சி செய்துவரும் குஜராத்தில் அக்கட்சிக்கு போட்டியாக ஆம் ஆத்மியும் ஆட்சியை பிடிக்கும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த தேர்தலில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியும் போட்டியை சந்திக்க இருக்கிறது.

இதனால், வாக்குகளை இந்த இரு கட்சிகளும் பிரிக்க கூடும் என்ற நிலையில், அவர்களிடம் இருந்து விலகி இருக்கும்படி சிறுபான்மையினரிடம் காங்கிரஸ் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆளும் பா.ஜ.க.வின் பி மற்றும் சி அணிகளே இந்த இரு கட்சிகள் என காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், காங்கிரஸ் ஆட்சி செய்த பஞ்சாப்பில் தனது தேர்தல் அறிக்கை மற்றும் யுக்தியால் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்து அதிகாரத்திற்கு வந்துள்ளது. தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களை வரிசையாக செயல்படுத்தியும் வருகிறது.

இதனை தொடர்ந்து குஜராத்திலும் தனது தேர்தல் வேட்டையை ஆம் ஆத்மி தொடங்கி நடத்தி வருகிறது. இதன்படி குஜராத்துக்கு கடந்த 21ந்தேதி வருகை தந்த டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் சூரத் நகரில் மக்களிடையே கூட்டத்தில் பேசும்போது, குஜராத் மக்கள் அனைவருக்கும் நாங்கள் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவோம் என கூறி ஆச்சரியப்படுத்தினார்.

இதுதவிர, அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கும் 24x7 என்ற வகையில் மின்சார வினியோகம் கிடைக்க உறுதி செய்வோம். கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 31ந்தேதி வரையிலான நிலுவையிலுள்ள அனைத்து மின் கட்டண பில்களையும் தள்ளுபடி செய்வோம் என கூறி அசத்தினார்.

இதனை தொடர்ந்து, அவர் குஜராத்திற்கு மீண்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக நாளை மறுநாள் அவர் குஜராத்திற்கு செல்கிறார்.

இந்த பயணத்தில் குஜராத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சோம்நாத் கோவிலுக்கும் அவர் செல்ல இருக்கிறார். ராஜ்கோட்டில் நடைபெறும் ஆம் ஆத்மி கட்சியின் கூட்டமொன்றிலும் அவர் பங்கேற்கிறார்.

கடந்த சில மாதங்களாக குஜராத்துக்கு கெஜ்ரிவால் அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதுடன், பா.ஜ.க.வுக்கு போட்டியாக, பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் மற்றும் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் உறுதிகளை வழங்கி வருகிறார்.

டெல்லி போன்ற பள்ளி உட்கட்டமைப்புகள் உருவாக்கப்படும் என அவர் உறுதி தந்துள்ளார். காங்கிரசை பஞ்சாப்பில் வீழ்த்தி வெற்றி பெற்று, ஆட்சியமைத்துள்ள ஆம் ஆத்மி, அடுத்து இமாசல பிரதேசம் மற்றும் குஜராத்திலும் அதிகாரத்திற்கு வரும் முனைப்பில் உள்ளது.

இதனை தொடர்ந்து பா.ஜ.க.வும் மெல்ல பிரசார பணிகளை தொடங்கியுள்ளது. இதன்படி, மத்திய மந்திரியான அமித்ஷா நேற்று குஜராத்துக்கு சென்றுள்ர். காந்திநகரில் பொது மருத்துவமனையில் சுகாதார வசதிகளை அவர் ஆய்வு மேற்கொண்டார்.

அதன்பின் பேசிய அவர், மத்திய மற்றும் உ.பி. அரசு, போதிய அளவில் மற்றும் உலக தரம் வாய்ந்த சுகாதார நலன் சார்ந்த வசதிகளை மக்களுக்கு வழங்குவதற்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறது என்று பேசியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்