பா.ஜனதா பிரமுகர் படுகொலை; 4 பேர் கைது

தார்வாரில் பா.ஜனதா பிரமுகரை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-19 18:45 GMT

உப்பள்ளி-

தார்வாரில் பா.ஜனதா பிரமுகரை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். இறந்தவரின் உடலுக்கு மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி நேரில் ெசன்று அஞ்சலி செலுத்தினார்.

பா.ஜனதா பிரமுகர் கொலை

தார்வார் தாலுகா கரக போலீஸ் எல்லைக்குட்பட்ட கொட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன் கம்மாரா(வயது 36). இவர் தார்வார் மாவட்ட பா.ஜனதா இளைஞரணி தலைவராக பொறுப்பு வகித்து இருந்தார். மேலும் கிராம பஞ்சாயத்து தலைவராகவும் இருந்தார். பா.ஜனதா சார்பில் பல போராட்டங்களை இவர் முன் நின்று நடத்தி இருந்தார். தற்போது தேர்தல் நேரம் என்பதால் கடந்த சில நாட்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் உற்சம்மா தேவி கோவில் திருவிழா நடந்தது. இந்த திருவிழாவில் பிரவீன் கம்மாரா கலந்து கொண்டார். அப்போது சிலர் குடிபோதையில் வந்து திருவிழாவில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்தனர். அவர்களை பிரவீன் கம்மாரா தட்டிகேட்டார். அப்போது அந்த கும்பலை சேர்ந்தவர்கள் பிரவீன் கம்மாராவிடம் தகராறில் ஈடுபட்டனர். இதை பார்த்த கிராம மக்கள் அந்த கும்பலை அங்கிருந்து வெளியேற்றினர்.

கத்தியால் குத்தி கொலை

இதையடுத்து திருவிழா முடிந்து நள்ளிரவு பிரவீன் கம்மாரா வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். இதை அறிந்த தகராறு செய்த கும்பலை சேர்ந்த 4 பேர், மோட்டார் சைக்கிளில் வந்து, பிரவீன் கம்மாராவை வழிமறித்தனர். பின்னர் கையில் வைத்திருந்த கத்தியால், பிரவீன் கம்மாராவை அந்த கும்பல் சேர்ந்தவர்கள் சரமாரியாக குத்தினர்.

இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்காக போராடி கொண்டிருந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முன்விரோதமா?

இது குறித்து கரக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லோகேசிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆஸ்பத்திரிக்கு ெசன்ற போலீசார் பிரவீன் கம்மாராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து போலீசார் விசாரித்தனர். அந்த விசாரணையில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட மோதல் காரணமாக பிரவீன் கம்மாரா கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்தது. கொலையாளிகள் குறித்த தகவல்கள் உடனே போலீசாருக்கு கிடைத்தது. அந்த தகவலின் பேரில் ராகவேந்திரா உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பெயர், விவரங்கள் வெளியிடவில்லை.

பிரகலாத் ஜோஷி அஞ்சலி

இந்நிலையில் ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த பிரவீன் கம்மாராவின் உடலுக்கு பா.ஜனதா மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த கொலை குறித்து கரக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இந்த கொலையை தொடர்ந்து கொட்டூர் கிராமத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்