அசாம் வெள்ளம்; பலி எண்ணிக்கை 84 ஆக உயர்வு

அசாமில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 27 மாவட்டங்களில் 14.39 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2024-07-11 06:31 GMT

கவுகாத்தி,

அசாமில் கடந்த மாதத்தில் இருந்து மாநிலம் முழுவதும் பருவமழை பெய்து வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

இதனால், பிரம்மபுத்ரா மற்றும் அதன் கிளை நதிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதுதவிர, திகவ், ஜியா-பராலி, பேகி, குஷியாரா உள்ளிட்ட ஆறுகளிலும் வெள்ள நீர் அபாய அளவை கடந்து ஓடுகிறது. அசாமில் வெள்ள பாதிப்புக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணிநேரத்தில் 5 பேர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 27 மாவட்டங்களில் சுமார் 14.39 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அசாம் பேரிடர் மேலாண் கழகம் தெரிவித்துள்ளது.

கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 86 வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட 2580 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. 1,57,000 பேர் இன்னும் 365 நிவாரண முகாம்கள் மற்றும் விநியோக மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

அசாமில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக காசிரங்கா தேசிய பூங்காவில் இதுவரை ஒன்பது காண்டாமிருகங்கள் உட்பட 159 வன விலங்குகள் இறந்துள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காசிரங்கா தேசிய பூங்காவின் கள இயக்குனர் சோனாலி கோஷ் கூறியதாவது,

"காசிரங்கா தேசிய பூங்காவில் இதுவரை 159 வன விலங்குகள் வெள்ளம் காரணமாக இறந்துள்ளன. 159 வனவிலங்குகளில், 128 பன்றி மான்கள், 9 காண்டாமிருகங்கள், 2 சதுப்பு மான்கள் மற்றும் 2 சாம்பார் ஆகியவை வெள்ள நீரில் மூழ்கி இறந்தன. மறுபுறம், 12 பன்றி மான்கள், ஒரு சதுப்பு மான், ரீசஸ் மக்காக் மற்றும் நீர்நாய்க்குட்டி ஆகியவை பராமரிப்பின் கீழ் இறந்தன. 2 பன்றி மான்கள் வாகனம் மோதி இறந்தன, மற்ற காரணங்களுக்காக ஒரு நீர்நாய் (குட்டி) இறந்தது. பூங்கா நிர்வாகமும் வனத்துறையும் இணைந்து வெள்ளத்தின் போது 133 விலங்குகளை மீட்டனர். அதில் 111 விலங்குகள் சிகிச்சைக்காக பின் விடுவிக்கப்பட்டன." இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்