பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு

அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவையடுத்து, ஞானவாபி மசூதியில் பலத்த பாதுகாப்புடன் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

Update: 2023-08-04 05:25 GMT

அலகாபாத்,

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விசுவநாதர் கோவிலுக்கு அருகே ஞானவாபி மசூதி இருக்கிறது. அந்த மசூதி, கோவிலை இடித்துக் கட்டப்பட்டிருப்பதாகவும், அதை மீண்டும் இந்துக்களிடம் வழிபாட்டுக்காக ஒப்படைக்க வேண்டும் என்றும் வாரணாசி நீதிமன்றத்தில் சில பெண்களால் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், அந்தப் பகுதியில் தொல்லியல் துறை ஆய்வு செய்வதற்கு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 24-ந்தேதி தொல்லியல் துறை ஆய்வை தொடங்கியது. இதை எதிர்த்து மசூதி நிர்வாகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

உச்சநீதிமன்றம் ஆய்வுக்கு தடைவிதித்தது. மேலும், இதுதொடர்பாக அலகாபாத் ஐகோர்ட்டை அணுக கேட்டுக்கொண்டது. இதனால் மசூதி சார்பில் அலகாபாத் ஐகோர்ட்டில் ஆய்வுக்கு தடை விதிக்கக்கோரி மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணை கடந்த மாதம் 26 மற்றும் 27-ந்தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. விசாரணை முடிந்த நிலையில் ஆகஸ்டு 3-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என ஐகோர்ட்டு தெரிவித்தது. இந்நிலையில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அதில் கூறப்பட்டதாவது:

ஆய்வு செய்வதால், கட்டித்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என, தொல்லியல் துறை உறுதி அளித்துள்ளது. நீதியை நிலைநாட்டும் வகையில், உண்மையை கண்டறிய தொல்லியல் துறை ஆய்வு நடத்தலாம். இது தொடர்பாக மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் எந்த மாற்றம் செய்யவும், தலையிடவும் விரும்பவில்லை. அதனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.  இவ்வாறு ஐகோர்ட்டு உத்தரவில் குறிப்பிடப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து ஞானவாபி வளாக நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீது இன்று விசாரணை நடக்கலாம் என தெரிகிறது.

இந்நிலையில், ஐகோர்ட்டு உத்தரவைத் தொடர்ந்து, ஞானவாபி வளாகத்தில் தொல்லியல் துறையின் ஆய்வு பணியை துவங்கி உள்ளனர். இதனையடுத்து மசூதி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்