ஆட்சியை கவிழ்க்க சதி: வசுந்தரா ராஜேவால் என் அரசு கவிழாமல் தப்பியது - அசோக் கெலாட் பரபரப்பு தகவல்

பா.ஜனதா தலைவர் வசுந்தரா ராஜேவால் தன் ஆட்சி கவிழாமல் தப்பியதாக ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் கூறினார்.

Update: 2023-05-08 22:51 GMT

கோப்புப்படம்

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில், முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் அங்கு சட்டசபை தேர்தல் நடக்கிறது.

கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம், அசோக் கெலாட் அரசுக்கு எதிராக, துணை முதல்-மந்திரியாக இருந்த சச்சின் பைலட்டும், அவருக்கு ஆதரவான 18 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் போர்க்கொடி உயர்த்தினர்.

வெளிமாநிலத்தில் முகாமிட்டிருந்த அந்த எம்.எல்.ஏ.க்களால் அசோக் கெலாட் அரசு கவிழும் நிலை எழுந்தது. காங்கிரஸ் மேலிடத்தின் தலையீட்டால், பிரச்சினை முடிவுக்கு வந்தது. அதேபோல், இப்போதும் சச்சின் பைலட் தலைமையில் அசோக் கெலாட் அரசுக்கு நெருக்கடி எழுந்துள்ளது.

பணம் கொடுத்த அமித்ஷா

இந்நிலையில், தோல்பூர் என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்-மந்திரி அசோக் கெலாட் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-

கடந்த 2020-ம் ஆண்டு எனது அரசை கவிழ்க்க மத்திய மந்திரிகள் அமித்ஷா, கஜேந்திரசிங் ஷெகாவத், தர்மேந்திர பிரதான் ஆகியோர் சதி செய்தனர். அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுத்தனர்.

பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து காங்கிரசுக்கு தாவிய 3 எம்.எல்.ஏ.க்கள்தான் இதுகுறித்து என்னை உஷார்படுத்தினர்.

ஆனால், ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான வசுந்தரா ராஜே சிந்தியா, முன்னாள் சபாநாயகர் கைலாஷ் மேக்வால் ஆகியோர் ஆதரவு தர மறுத்துவிட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பணபலத்தை பயன்படுத்தி கவிழ்ப்பது ராஜஸ்தான் கலாசாரம் அல்ல என்று அவர்கள் கூறிவிட்டனர்.

நியாயம் அல்ல

இதேபோல், முன்பு, ராஜஸ்தானில், பைரோன்சிங் ஷெகாவத் தலைமையில் பா.ஜனதா அரசு நடந்து வந்தபோது, பா.ஜனதாவில் ஒரு பிரிவினர் ஆட்சியை கவிழ்க்க முயன்றனர். அப்போது, ஷெகாவத், கவலைக்கிடமான நிலையில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார்.

நான் நினைத்திருந்தால், அவரது ஆட்சியை கவிழ்த்திருக்க முடியும். ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்ப்பது நியாயம் அல்ல என்று அதற்கு ஆதரவு அளிக்க மறுத்துவிட்டேன். அதே கருத்தைத்தான் வசுந்தரா ராஜேவும், கைலாஷ் மேக்வாலும் இப்போது தெரிவித்தனர். அதனால் எனது அரசு கவிழாமல் தப்பியது.

இடைநீக்கம்

இதுபோல், ராஜஸ்தானில் மாநிலங்களவை தேர்தல் நடந்தபோது, பா.ஜனதா எம்.எல்.ஏ.வான ஷோபாராணி குஷ்வா, கட்சி மாறி, காங்கிரஸ் வேட்பாளருக்கு ஓட்டு போட்டார். அது, பா.ஜனதா தலைவர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.

அதனால் அவரை பா.ஜனதாவில் இருந்து இடைநீக்கம் செய்தனர். ஷோபாராணி துணிச்சலான பெண்மணி. தன் மனசாட்சிப்படி அவர் வாக்களித்தார். அதனால் எனது அரசு காப்பாற்றப்பட்டது. என் வாழ்க்கையில் இச்சம்பவத்தை மறக்க மாட்டேன்.

அமித்ஷாவிடம் வாங்கிய பணத்தை அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்னும் திருப்பி தரவில்லை. இதனால் அவர்கள் ஆட்சியை கவிழ்க்க அமித்ஷாவின் நிர்ப்பந்தத்தில் இருக்க வேண்டி இருக்கும்.

அமித்ஷா, மத்திய உள்துறை மந்திரி. அவர் மிரட்டுவார். மராட்டியத்தில் சிவசேனா கட்சியை உடைத்தவர். எனவே, அவரிடம் வாங்கிய பணத்தை திருப்பி தந்து விடுமாறு அதிருப்தி எம்.எல்.ஏ.க்களிம் கூறியுள்ளேன்.

அந்த பணத்தில் ஏதாவது செலவழித்து இருந்தால், அதை நான் கொடுக்கிறேன் அல்லது மேலிடத்திடம் இருந்து வாங்கி தருகிறேன் என்று சொல்லி இருக்கிறேன் என்று அவர் பேசினார்.

வசுந்தரா மறுப்பு

இதற்கிடையே, அசோக் கெலாட் கூறியதை வசுந்தரா ராஜே மறுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

அசோக் கெலாட் என்னை பாராட்டுவது பெரிய சதி. என் வாழ்க்கையில் யாரும் என்னை இதுபோல் இழிவுபடுத்தியது இல்லை. சொந்த கட்சியில் எதிர்ப்பு எழுந்துள்ளதால், அவர் இத்தகைய உண்மையற்ற குற்றச்சாட்டுகளை கூறுகிறார். அவரது முயற்சி வெற்றி பெறாது என்று அவர் கூறியுள்ளார்.

மத்திய மந்திரி பேட்டி

இதுபோல், மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தும் மறுப்பு தெரிவித்துள்ளார். ஜெய்ப்பூரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வசுந்தரா ராஜே எங்கள் மூத்த தலைவர். 2 தடவை முதல்-மந்திரியாகவும், 2 தடவை மாநில பா.ஜனதா தலைவராகவும் இருந்தவர். தனது அரசியல் ஆதாயத்துக்காக பொறுப்பற்ற கருத்தை அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

எங்கே, எப்போது, எந்த வழியில் தனது அரசை வசுந்தரா ராஜே காப்பாற்றினார் என்பதை அசோக் கெலாட் முழுமையாக தெளிவுபடுத்த வேண்டும். அவருக்கு எதிராக வழக்கு தொடருவது குறித்து பா.ஜனதா தலைவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள் என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்