போக்சோ வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை
சிகாரிப்புரா தாலுகாவில், போக்சோ வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிவமொக்கா;
போக்சோ வழக்கு
சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா தாலுகா இத்தலா கிராமம் அருகே உள்ள உனசேகொப்பா கிராமத்தைச் சேர்ந்தவர் மதன்குமார்(வயது 24). கடந்த 2019-ம் ஆண்டு இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.சிறையில் இருந்து மதன்குமார் ஜாமீனில் வெளியே வந்தார். தற்போது அவர் மீதான பாலியல் பலாத்கார வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.
பணம் கேட்டு மிரட்டல்
அந்த வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டிவிட்ட நிலையில் விரைவில் இறுதி தீர்ப்பு வெளியாக வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் மதன்குமாரை சிலர் மிரட்டி பணம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவர் பணம் கொடுக்க மறுத்ததால் அவருக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மதன்குமார் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
அதன்பேரில் அவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி சிகாரிப்புரா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து மதன்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
உருக்கமான கடிதம்
மேலும் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு மதன்குமார் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் அவர் தன் மீதான பாலியல் பலாத்கார வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டிவிட்ட நிலையில் சிலர் தன்னை மிரட்டி பணம் பறிக்க முயல்வதாகவும், பணம் கொடுக்க மறுத்ததால் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருவதாகவும் எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் அவர் தன்னை மிரட்டியதாக சிலரின் பெயரை கடிதத்தில் குறிப்பிட்டு இருப்பதாகவும், அதன்பேரில் அந்த நபர்களை பிடித்து விசாரிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் போலீசார் கூறினர்.
போலீஸ் நிலையம் முற்றுகை
இதற்கிடையே சிகாரிப்புரா போலீஸ் நிலையத்தை மதன்குமாரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் முற்றுகையிட்டனர். அவர்கள் மதன்குமாருக்கு மிரட்டல் விடுத்த நபர்களை உடனடியாக கைது செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டக்காரர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இச்சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். அதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.