இளம்பெண்களை காதல் வலையில் வீழ்த்தி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது

பெங்களூருவில் இளம்பெண்களை காதல் வலையில் வீழ்த்தி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது செய்யப்பட்டார். அவர் தனது செல்போனில் பல பெண்களுடைய ஆபாச வீடியோக்கள் வைத்திருந்ததும் போலீசாரின் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

Update: 2023-02-05 18:45 GMT

பெங்களூரு:

பெங்களூருவில் இளம்பெண்களை காதல் வலையில் வீழ்த்தி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது செய்யப்பட்டார். அவர் தனது செல்போனில் பல பெண்களுடைய ஆபாச வீடியோக்கள் வைத்திருந்ததும் போலீசாரின் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

இளம்பெண் புகார்

பெங்களூருவில் வசித்து வரும் ஒரு இளம்பெண் தன்னை வாலிபர் ஒருவர் காதலித்து ஏமாற்றி விட்டதாகவும், தற்போது அவர் தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்துவதாகவும், இல்லையேல் தன்னுடைய ஆபாச வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டுவதாகவும் பெங்களூரு தெற்கு மண்டல சி.இ.என்.(சைபர், பொருளாதாரம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு) போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். விசாரணையில் அந்த இளம்பெண்ணுக்கும், வாலிபருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டதும், அது நாளடைவில் காதலாக மாறியதும் தெரியவந்தது. பின்னர் இளம்பெண்ணிடம் திருமண ஆசை வார்த்தைகள் கூறி நேரில் அழைத்து வாலிபர் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.

கம்ப்யூட்டர் என்ஜினீயர்

முன்னதாக இருவரும் வீடியோ அழைப்பு மூலமும், நேரில் சந்தித்து நெருக்கமாக இருந்தபோதும் அந்த வாலிபர் அதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அதை வைத்து தான் அவர், இளம்பெண்ணை மிரட்டி வருவது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் இளம்பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி, பாலியல் பலாத்காரம் செய்து தற்போது மிரட்டி வருவது பெங்களூரு கண்ணப்பள்ளி பகுதியைச் சேர்ந்த பிரசாத்(வயது 27) என்பதும், அவர் கம்ப்யூட்டர் என்ஜினீயர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் பிரசாத்தை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து அவருடைய செல்போனையும் பறிமுதல் செய்து சோதனை செய்தனர். அதில் பிரசாத் இதுபோல் இன்ஸ்டாகிராம் மூலம் ஏராளமான இளம்பெண்களை காதல் வலையில் வீழ்த்தி ஏமாற்றி இருப்பதும், அவர்களின் ஆபாச வீடியோ அழைப்புகளை அப்படியே தனது செல்போனில் பதிந்து வைத்திருப்பதும் தெரியவந்தது.

208 ஆபாச வீடியோக்கள்

இவ்வாறாக பிரசாத் 208 ஆபாச வீடியோக்களை வைத்திருந்துள்ளார். இவர்களில் 6 பெண்களிடம் திருமண ஆசை வார்த்தைகள் கூறி நேரில் வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்திருப்பதும் தெரியவந்தது. இவரால் ஏமாற்றப்பட்ட பெண்கள் இவரை திருமணத்திற்காக வற்புறுத்தும்போது அவர்களின் ஆபாச வீடியோக்களை காண்பித்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி வந்ததும் தெரியவந்தது.

இதுதவிர இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு தொடங்கி பலரிடம் வேலை வாங்கித்தருவதாக கூறி ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார், பிரசாத்திடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்