வாக்காளர் தகவல்களை திருடிய வழக்கு: சிலுமே நிறுவன தலைவர் ரவிக்குமார் கைது

பெங்களூருவில், வாக்காளர் தகவல்களை திருடிய வழக்கில் சிலுமே நிறுவனத்தின் தலைவர் ரவிக்குமார் கைது செய்யப்பட்டார். வக்கீலை பார்க்க வந்த போது அவர் போலீசாரிடம் சிக்கினார்.

Update: 2022-11-21 18:45 GMT

பெங்களூரு:

பெங்களூருவில், வாக்காளர் தகவல்களை திருடிய வழக்கில் சிலுமே நிறுவனத்தின் தலைவர் ரவிக்குமார் கைது செய்யப்பட்டார். வக்கீலை பார்க்க வந்த போது அவர் போலீசாரிடம் சிக்கினார்.

வாக்காளர் தகவல்கள் திருட்டு

பெங்களூரு மாநகராட்சி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, திருத்தம் செய்வது உள்ளிட்ட பணிகளை சிலுமே என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்கி இருந்தது. இந்த நிலையில் அந்த நிறுவனம் வாக்காளர் தகவல்களை திருடியதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு தெரிவித்து இருந்தது. மேலும் காங்கிரசுக்கு ஆதரவான 7 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும் காங்கிரஸ் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.

ஆனால் காங்கிரஸ் கூறும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறி வருகிறார். இந்த நிலையில் வாக்காளர் தகவல்கள் திருடப்பட்டது தொடர்பாக மாநகராட்சி அளித்த புகார்களின்பேரில் அல்சூர்கேட், காடுகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சிலுமே நிறுவனத்தின் தலைவர் ரவிக்குமார், அவரது சகோதரரும், இணை இயக்குனருமான கெம்பேகவுடா ஆகியோர் தலைமறைவானார்கள். அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர்.

சோதனை

இதற்கிடையே சிலுமே நிறுவனம், ரவிக்குமாரின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தி ஆவணங்களை பறிமுதல் செய்து இருந்தனர். மேலும் ரவிக்குமார், கெம்பேகவுடாவின் மனைவிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். முன்னதாக சிலுமே நிறுவன ஊழியர்களான தர்மேஷ், ரேணுகா பிரசாத் ஆகியோரையும் போலீசார் கைது செய்து இருந்தனர்.

இந்த நிலையில் கெம்பேகவுடாவின் மனைவி ஸ்ருதியிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது கெம்பேகவுடா அவரது நண்பர் வீட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 19-ந் தேதி சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டாவில் வைத்து கெம்பேகவுடாவை போலீசார் கைது செய்து இருந்தனர். மேலும் பிரஜ்வல் என்பவரும் கைது செய்யப்பட்டு இருந்தார். ஆனால் ரவிக்குமார் மட்டும் போலீசாரிடம் சிக்காமல் போக்கு காட்டி வந்தார்.

ரவிக்குமார் கைது

இந்த நிலையில் பெங்களூரு லால்பாக் அருகே வசித்து வரும் தனது வக்கீலை சந்திக்க ரவிக்குமார் வருவதாக அல்சூர்கேட் போலீசாருக்கு தகவல் கிடைத்து இருந்தது. அந்த தகவலின்பேரில் வக்கீலை சந்திக்க வந்த ரவிக்குமாரை நேற்று முன்தினம் இரவு அல்சூர்கேட் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையின் போது வாக்காளர்களின் தகவல்களை பற்றி கூற ஒரு வாக்காளர் அட்டைக்கு ரூ.100 முதல் ரூ.150 வரை சிலுமே நிறுவனம் விலை நிர்ணயித்து இருந்ததாகவும், ஒரு தொகுதியில் உள்ள ஒரு லட்சம் வாக்காளர்கள் பற்றிய தகவல்களை வழங்க ரூ.1 கோடி வரை வசூலித்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பெங்களூருவில் மொத்தம் 28 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

15 பேருக்கு நோட்டீசு

இதனால் 28 தொகுதிகளின் வாக்காளர்கள் பற்றிய விவரங்களை வழங்கி சிலுமே நிறுவனம் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் ரவிக்குமாருக்கு மந்திரி ஒருவருடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. பெங்களூரு புறநகர் மாவட்டம் கல்லநாயக்கனஹள்ளி பகுதியில் ரவிக்குமாருக்கு சொந்தமான 2 ஏக்கர் பாக்கு தோட்டத்தில் ஒரு பண்ணை வீடு உள்ளது. அந்த பண்ணை வீட்டிற்கு சில அரசியல் பிரமுகர்கள் வந்து சென்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரவிக்குமார் கைது செய்யப்பட்டது குறித்து மத்திய மண்டல துணை போலீஸ் கமிஷனர் சீனிவாச கவுடா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

வாக்காளர் தகவல்களை திருடியது தொடர்பாக அல்சூர்கேட் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் சிலுமே என்ற தனியார் நிறுவனத்தின் தலைவர் ரவிக்குமார் தலைமறைவாக இருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்ததும் தலைமறைவான அவர் துமகூரு, திப்தூர், சிர்சி பகுதியில் சுற்றித்திரிந்து உள்ளார். பெங்களூருவில் உள்ள வக்கீலை பார்க்க வந்த போது அவரை போலீசார் கைது செய்து உள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 5 பேரை கைது செய்து உள்ளோம். விசாரணைக்கு ஆஜராகும்படி 15 பேருக்கு நோட்டீசும் அனுப்பி உள்ளோம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்