தேர்வு முறைகேட்டில் ஜாமீன் பெற்றவர்: சிறை முன்பு வாலிபரை மீண்டும் கைது செய்த சி.ஐ.டி. போலீசார்

தேர்வு முறைகேட்டில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளி வந்தவர் மீண்டும் சிறை முன்பு வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-18 21:20 GMT

பெலகாவி:

கர்நாடக மின் பரிமாற்ற கழகத்தில் காலியாக இருந்த இளநிலை உதவியாளர்கள் பதவிக்கான தேர்வு கடந்த ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி நடைபெற்றது. இதற்காக கோகாக் டவுன் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த தேர்வு மையத்தில் பலர் தேர்வு எழுதினர். இந்த நிலையில் அந்த தேர்வு மையத்தில் முறைகேடு நடந்ததாக, தேர்வர் ஒருவர் கோகாக் போலீசில் புகார் அளித்தார். இந்த வழக்கு சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக மொத்தம் 22 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் தேர்வு மையத்தில் இருந்து செல்போன் மூலம் கேள்வி தாள்களை பெற்று, புளூடூத்தை பயன்படுத்தி விடைகளை தேர்வர்களுக்கு கூறியதாக, உப்பள்ளியில் தலைமறைவாக இருந்த சஞ்ஜீவ் பண்டாரி என்பவரை சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் பெலகாவி மாவட்ட கோர்ட்டு சஞ்ஜீவ் பண்டாரி உள்பட 20 பேரை ஜாமீனில் நேற்று விடுவித்தது. அதையடுத்து இண்டல்கா சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த சஞ்ஜீவ் பண்டாரியை, சி.ஐ.டி. போலீசார் சிறை முன்பு வைத்து மீண்டும் கைது செய்தனர். இதையடுத்து அவருக்கு 6 நாட்கள் போலீஸ் காவல் விதித்து 5-வது கூடுதல் கோர்ட்டு உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்