கருட சேவையையொட்டி திருப்பதியில் 3 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவிலில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை இன்று இரவு ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படுகிறது.;
திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தையொட்டி நேற்று இரவு ஏழுமலையான் சர்வ பூபால வாகனத்தில் 4 மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இன்று காலை மோகினி வாகனத்தில் மாட வீதிகளில் உலா வந்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா கோசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை நடைபெறுகிறது.
இரவு 7 மணிக்கு தங்க கருட வாகனத்தில் ஏழுமலையான் மாடவீதிகளில் உலா வருகிறார். ஏறக்குறைய 3 லட்சம் பக்தர்களுக்கு கருட சேவை தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு தென்மேற்கு வாசல், வடமேற்கு வாசல், வட கிழக்கு வாசல் ஆகிய பகுதிகளில் உள்ள ஆரத்தி காண்பிக்கும் இடங்களில் ஆரத்தி ரத்து செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கபடுகின்றனர். ஆரத்தி வழங்கும் நேரத்தில் 5 பேருக்கு தரிசனம் கொடுக்க முடியும். எனவே இந்த ஆண்டு ஆரத்திகளை ரத்து செய்து சாதாரண பக்தர்கள் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆரத்தி தலத்திலும் 10,000 பேருக்கு கருடசேவை காண வாய்ப்பு கிடைக்கும். அதேபோல், கேலரிகளிலும், வணிக வளாகம் முதல், கோவில் எதிரில் உள்ள நடராஜர் மண்டபம் வரை, 2 லட்சம் பேரை அனுமதித்தால், கூடுதலாக, 25,000 பேர் தரிசனம் செய்யலாம். இதன் மூலம் சுமார் 2.75 லட்சம் முதல் 3 லட்சம் பேர் கருட சேவையை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.
மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத கட்டடம், ரம்பகீஜாவில் சிறப்பு வரிசைகள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு தரிசனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் திருப்தி அடையும் வகையில் கருடசேவை தரிசனம் அளிக்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கருட சேவையையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்து வருகின்றனர்.
பக்தர்களின் வசதிக்காக நிமிடத்திற்கு 2 பஸ்கள் திருப்பதியில் இருந்து திருமலைக்கு இயக்கப்படுகிறது. மேலும் திருமலைக்கு செல்ல 20 ஆயிரம் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக வரும் வாகனங்கள் திருப்பதியிலேயே பார்க்கிங் செய்துவிட்டு பஸ்களில் திருப்பதி செல்ல வேண்டும் என தேவஸ்தானம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
நேற்று மதியம் முதல் இன்று இரவு வரை பைக்குகள் திருமலைக்கு செல்ல அனுமதி வழங்காததால் பஸ்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டத்தை காண முடிகிறது. பக்தர்களின் வசதிக்காக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் உணவு குடிநீர் மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும் பாதுகாப்பு பணியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
கருட சேவையையொட்டி ஆண்டுதோறும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவிலில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை திருப்பதிக்கு கொண்டு வந்து ஏழுமலையானுக்கு சமர்ப்பிப்பது வழக்கம். அதன்படி நேற்று மாலை ஆண்டாள் கோவில் இணை ஆணையர் செல்லதுரை, அறங்காவலர் குழு தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாளுக்கு சூடிய மாலையை திருப்பதி ஆஞ்சநேயர் சாமி கோவிலுக்கு கொண்டு வந்தனர்.
அங்கு பெரிய ஜீயர் மற்றும் சின்ன ஜீயர் சாமிகள் சிறப்பு பூஜைகள் செய்து திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி, முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி ஆகியோரிடம் வழங்கினர். இதையடுத்து இன்று இரவு ஏழுமலையானுக்கு ஆண்டாள் மாலை அணிவிக்கப்படுகிறது. திருப்பதியில் நேற்று 75,382 பேர் தரிசனம் செய்தனர். 31,434 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.85 கோடி உண்டியலில் காணிக்கையாக வசூலானது.