3 குழந்தைகளை மத்திய அரசின் நவோதயா பள்ளியில் சேர்க்க ஏற்பாடு; மத்திய மந்திரி ஷோபா உறுதி

சிக்கமகளூருவில், வீட்டின் மீது மரம் விழுந்து பலியான 2 பெண்களின் 3 குழந்தைகளை மத்திய அரசின் நவோதயா பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க ஏற்பாடு செய்து வருவதாக மத்திய மந்திரி ஷோபா கூறினார்.

Update: 2022-08-13 15:13 GMT

சிக்கமகளூரு;

வீடுகள் இடிந்தன

சிக்கமகளூரு மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் ஏராளமான வீடுகள் இடிந்துள்ளன. இந்த நிலையில் சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா தலகோடு கிராமத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு வீட்டின் மீது ராட்சத மரம் சரிந்து விழுந்தது. இதில் சந்திரம்மா, சரிதா ஆகிய 2 பெண்களும் பரிதாபமாக இறந்துவிட்டனர்.

இந்த நிலையில் இதுபற்றி அறிந்த மத்திய மந்திரி ஷோபா, நேற்று முன்தினம் மாலையில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் சந்திரம்மா, சரிதா ஆகியோரின் குழந்தைகள் 3 பேரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும் அவர்களுக்கு அரசு சார்பில் தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கினார். அதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நவோதயா பள்ளியில்...

மலைநாடு மாவட்டங்களில் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு அளவுக்கு அதிகமாக மழை பெய்து வருகிறது. பல இடங்களில் சேதம் ஏற்பட்டு உள்ளது. தொடர் கனமழையால் பல இடங்கள் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கின்றன. அதனால் குடியிருப்பு பகுதிகளில் இருக்கும் மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உத்தரவிட்டுள்ளேன்.மேலும் இறந்த 2 பெண்களின் 3 குழந்தைகளையும் சிக்கமகளூருவில் உள்ள மத்திய அரசின் நவோதயா பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க ஏற்பாடு செய்து வருகிறேன். அவர்களை கண்டிப்பாக அந்த பள்ளியில் சேர்த்து படிக்க வைப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்