காஷ்மீரில் விபத்து எதிரொலி: 'துருவ்' ரக ஹெலிகாப்டர்கள் பறக்காமல் நிறுத்திவைப்பு
காஷ்மீரில் விபத்து எதிரொலி காரணமாக ‘துருவ்’ ரக ஹெலிகாப்டர்கள் பறக்காமல் நிறுத்திவைக்கப்பட்டது.
இந்திய ராணுவத்துக்கு சொந்தமான நவீன இலகுரக 'துருவ்' ஹெலிகாப்டர், காஷ்மீரில் கடந்த வியாழக்கிழமை விபத்துக்குள்ளானது. இதில் ஒரு தொழில்நுட்ப பணியாளர் உயிரிழந்தார். இரு விமானிகள் காயமடைந்தனர்.இந்த சம்பவத்தை தொடர்ந்து ராணுவத்தின் அனைத்து துருவ் ஹெலிகாப்டர்களும் பறக்காமல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. துருவ் ஹெலிகாப்டர்களில் ஏற்பட்ட இது போன்ற 2 விபத்துகளால், இந்திய கடற்படையும், கடலோர காவல் படையும் ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் முதல் இந்த ஹெலிகாப்டர்களை இயக்காமல் நிறுத்திவைத்தன.அவற்றில் முழுமையாக தொழில்நுட்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த பரிசோதனை முடிந்த ஹெலிகாப்டர்கள் மட்டுமே தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இந்திய விமானப் படையில் சுமார் 70 துருவ் ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டில் உள்ளன.இந்த இலகுரக ஹெலிகாப்டர், மத்திய அரசுக்கு சொந்தமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதாகும்.