அரசு அதிகாரிகளின் இடமாற்றத்திற்கு முதல்-மந்திரியின் அனுமதி கட்டாயம்; கர்நாடக அரசு அதிரடி உத்தரவு

அரசு அதிகாரிகளின் பணி இடமாற்றத்திற்கு முதல்-மந்திரியின் அனுமதி கட்டாயம் என்று கர்நாடக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2023-09-02 22:02 GMT

பெங்களூரு:

கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சி அமைந்ததில் இருந்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட அனைத்து தரப்பு அதிகாரிகளும் பணி இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அரசின் நிர்வாக வசதிக்காக அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவதாக மந்திரிகள் கூறி வருகின்றனர்.

ஆனால் அதிகாரிகள் இடமாற்றத்திற்கு லஞ்சம் பெறப்படுவதாக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி குற்றச்சாட்டு கூறி வருகிறார். அதே நேரத்தில் அதிகாரிகள் இடமாற்றம் விவகாரம் காரணமாக ஆளும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மந்திரிகள் இடையேயும் மோதல் உருவாகி உள்ளது. இதையடுத்து, இந்த விவகாரத்தை முதல்-மந்திரி சித்தராமையா தீவிரமாக எடுத்து கொண்டுள்ளார்.

இதையடுத்து, மாநிலத்தில் அரசு அதிகாரிகள் பணி இடமாற்றத்திற்கு தன்னுடைய அனுமதி கட்டாயம் என்று முதல்-மந்திரி சித்தராமையா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக கர்நாடக அரசின் நிர்வாக பிரிவு துறை கூடுதல் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சி நிர்வாகம் மற்றும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஏ, பி, சி மற்றும் டி பிரிவு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பணி இடமாற்றத்திற்கு முதல்-மந்திரியின் அனுமதி கட்டாயம் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் முதல்-மந்திரியின் கவனத்திற்கு கொண்டு வராமல் அதிகாரிகள், ஊழியர்கள் பணிஇடமாற்றம் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட துறையின் கூடுதல் செயலாளர், முதன்மை செயலாளர் மற்றும் முக்கிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக அரசு எச்சரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்