சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு.. காங். தலைவர் ஜெகதீஷ் டைட்லர் மீது கொலை குற்றச்சாட்டு பதிவு

குற்ற வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று டைட்லருக்கு சிறப்பு நீதிபதி ராகேஷ் சியால் உத்தரவிட்டார்.

Update: 2024-09-13 09:13 GMT

புதுடெல்லி:

1984-ம் ஆண்டு இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சீக்கியர்களுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கலவரம் மூண்டது. இதில் டெல்லி ஆசாத் மார்க்கெட் அருகே உள்ள புல் பங்காஷ் குருத்வாராவை தீ வைத்து எரித்து தாகுர் சிங், பாதல் சிங், குருசரண் சிங் ஆகிய 3 சீக்கியர்களை உயிருடன் எரித்து கொன்றது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஜெகதீஷ் டைட்லர் மீது கடந்த 2005-ம் ஆண்டு சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.

ஜெகதீஷ் டைட்லர் கலவரத்தை தூண்டியதால் கலவர கும்பல் கடைகளுக்கு தீயிட்டு அவற்றிலிருந்த பொருட்களை திருடியதுடன் 3 சீக்கியர்களையும் உயிருடன் எரித்து கொன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. தொடர் விசாரணைக்குப் பிறகு கடந்த ஆண்டு மே மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஜெகதீஷ் டைட்லர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் ஆய்வு செய்தது. குற்றம்சாட்டப்பட்ட டைட்லருக்கு எதிராக விசாரணையை தொடர போதுமான முகாந்திரம் இருப்பதாக கடந்த மாதம் 30-ம் தேதி நீதிபதி கூறியிருந்தார்.

இந்நிலையில், சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில், ஜெகதீஷ் டைட்லர் மீது கொலை குற்றச்சாட்டு மற்றும் பிற குற்றச்சாட்டுகளை டெல்லி கோர்ட்டு இன்று பதிவு செய்துள்ளது. சட்டவிரோதமாக கூடுதல், கலவரம், பல்வேறு குழுக்களிடையே பகையை ஊக்குவித்தல், அத்துமீறி நுழைதல், திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் குற்ற வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று டைட்லருக்கு சிறப்பு நீதிபதி ராகேஷ் சியால் உத்தரவிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்