டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி
இந்தியாவில் இதுவரை குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த 14 ஆம் தேதி குரங்கு அம்மை பாதிப்பு முதன் முதலாக உறுதி செய்யப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரள மாநிலம் வயநாடு வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 35 வயதான குரங்கு அம்மை பாதித்த நபர் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இவர் தொற்றில் இருந்து குணம் அடைந்தார். இவரை தவிர கேரளாவில் மேலும் 4 பேருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கேரளாவில் இதுவரை குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல் தலைநகர் டெல்லியில் இரண்டு பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில், இன்று டெல்லியில் வசிக்கும் நைஜீரிய நாட்டை சேர்ந்த ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாட்டில் குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.