ஆந்திர பிரதேசம்: 11 பழங்குடி பெண்கள் கும்பல் பலாத்கார வழக்கு; 21 போலீசார் விடுதலை

ஆந்திர பிரதேசத்தில் 16 ஆண்டுகளுக்கு முன் 11 பழங்குடி பெண்கள் கும்பல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளான 21 போலீசாரை கோர்ட்டு விடுதலை செய்து உள்ளது.

Update: 2023-04-08 11:21 GMT

விசாகப்பட்டினம்,

ஆந்திர பிரதேசத்தில் அல்லூரி சீதாராம ராஜூ மாவட்டத்தில் வக்கபள்ளி கிராமத்தில் கொந்த் என்ற பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், 2007-ம் ஆண்டு ஆகஸ்டில் சிறப்பு போலீஸ் படையினர் இந்த பகுதியில் விசாரணை என்ற பெயரில் தேடுதல் வேட்டைக்கு சென்றனர்.

ஆனால், 21 பேர் கொண்ட இந்த படையினர் கிராமத்தில் பழங்குடியின பெண்கள் 11 பேரை வேட்டையாடி, கும்பல் பலாத்காரம் செய்து உள்ளனர் என குற்றச்சாட்டு எழுந்தது. மனித உரிமை அமைப்பும் குற்றச்சாட்டு கூறியது. இதுபற்றிய விசாரணை விசாகப்பட்டினத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில், கூடுதல் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிபதி மற்றும் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்திற்கான சிறப்பு கோர்ட்டு, இந்த விசாரணையில், முறையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை போலீசார் மேற்கொள்ளவில்லை என கூறி 21 போலீசாரை விடுவித்து உத்தரவிட்டு உள்ளது.

எனினும், மாவட்ட சட்ட சேவை கழகம் வழியே, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளான போலீசார் யாரும் கைது செய்யப்படவில்லை. சிலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. சிலர் பணியின்போதே உயிரிழந்து விட்டனர்.

இந்த வழக்கில் தொடக்கத்தில் இருந்தே, மருத்துவ பரிசோதனை சான்றுகளை அழித்தும், குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையில், விசாரணை நடத்தியும் வரப்பட்டு உள்ளது என மனித உரிமை கழகம் குற்றச்சாட்டு கூறியுள்ளது.

பலாத்காரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டதில் இருந்தே, அவர்களது வாக்குமூலத்தில் கோர்ட்டுக்கு நம்பிக்கை உள்ளது என்பது வெளிப்படுகிறது என்று அந்த மனித உரிமை கழகத்தின் உறுப்பினர் கூறியுள்ளார்.

எனினும், அந்த நம்பிக்கைக்கு ஈடாக குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல், இழப்பீடு வழங்குவது என்பது வருத்தத்திற்கு உரியது என்ற வகையிலும் அவர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்