ஆந்திரா: ரசாயன ஆய்வகத்தில் விஷவாயு கசிவால் 178 பெண்கள் மயக்கம் - விசாரணை குழு அமைத்து அரசு உத்தரவு!

ஆந்திர பிரதேசத்தில் ஆய்வகத்தில் ஏற்பட்ட விஷவாயு கசிவுக்கான காரணத்தைக் கண்டறிய ஆந்திர அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது.

Update: 2022-06-04 09:37 GMT

அமராவதி,

ஆந்திர பிரதேசத்தில் விஷவாயு கசிவால் 178 பெண்களுக்கு வாந்தி, தலைவலி மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டு உள்ளது.

ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் அச்சுதாபுரம் பகுதியில் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் போரஸ் என்ற ரசாயன ஆய்வகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.இதற்கு அருகே பிராண்டிக்ஸ் அப்பேரல் இந்தியா என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் வளாகத்தில் சீட்ஸ் அப்பேரல் இந்தியா என்ற மற்றொரு நிறுவனமும் செயல்பட்டு வருகிறது. இதில், 1,800 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், போரஸ் ஆய்வகத்தில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டு உள்ளது. இந்த வாயு கசிவானது அருகேயிருந்த நிறுவனத்திற்கும் பரவியுள்ளது. இதில், சீட்ஸ் அப்பேரல் இந்தியா நிறுவனத்தில் பணியில் இருந்த பெண் தொழிலாளர்களுக்கு வாந்தி, தலைவலி மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டு உள்ளது.

உடனடியாக, தொழிலாளர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் நிலை சீராக உள்ளது எனவும் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஆய்வகத்தில் ஏற்பட்ட வாயு கசிவுக்கான காரணத்தைக் கண்டறிய ஆந்திர அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் இந்த கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டதையடுத்து இந்த குழு அமைக்கப்பட்டது. மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இதனை தொடர்ந்து, விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்