டிரோன்கள், ஹெலிகாப்டர் உதவியுடன் காஷ்மீரில் 5-வது நாளாக தொடரும் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை..!!

காஷ்மீரில் 3 அதிகாரிகள் வீரமரணம் அடைந்ததைத் தொடர்ந்த 5-வது நாளாக டிரோன்கள் உதவியுடன் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை தொடர்ந்தது;

Update:2023-09-18 04:56 IST

Image Courtacy: ANI

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் அனந்த்நாக் மற்றும் ரஜவுரி மாவட்டங்களில் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்தது. இதில் ரஜவுரியில் நடந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஒரு ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார். ஏராளமான ஆயுதஙகள் கைப்பற்றப்பட்டன.

இதேபோல அனந்த்நாக் மாவட்டத்தில் காடோல் வனப்பகுதியில் கடந்த புதன்கிழமை நடந்த தேடுதல் வேட்டையின்போது, பயங்கரவாதிகள் மறைந்திருந்து தாக்கியதில், ராணுவ கர்னல் மன்பிரீத் சிங், ராணுவ மேஜர் ஆஷிஸ், மற்றும் பாதுகாப்பு படையை சேர்ந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ஹுமாயுன் பாட் ஆகிய 3 பேர் வீர மரணம் அடைந்தனர்.

அவர்களை கொன்ற பயங்கரவாதிகள், வனப்பகுதிக்குள் பதுங்கி கொண்டனர். இதையடுத்து அந்த பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது.

5-வது நாளாக வேட்டை

நேற்று 5-வதுநாளாக தேடுதல் வேட்டை தொடர்ந்தது. அப்போது பல நேரங்களில் பயங்கரவாதிகள் சிறிய ரக பீரங்கி குண்டுகளை சுட்டு தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். வனப்பகுதி மற்றும் அருகில் உள்ள கிராமங்களிலும் டிரோன்கள் மூலமாகவும், ஹெலிகாப்டர் கொண்டும் தேடுதல் வேட்டை நடந்தது. குகை மற்றும் புதர்போன்ற பதுங்குமிடங்களில் அவர்கள் மறைந்து இருப்பது கேமரா காட்சிகளில் கண்டு பிடிக்கப்பட்டது. அதைக் கொண்டு அவர்களை நெருங்கித் தாக்கும் திட்டம் வகுக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை அப்படி ஒரு மறைவிடத்தை சிறிய ரக பீரங்கி குண்டால் தாக்கியபோது ஒரு பயங்கரவாதி தப்பி ஓடுவது டிரோன் கேமராவில் பதிவானது. இதுபோல இன்னும் சில பயங்கரவாதிகளும் கேமரா கண்களில் சிக்கி உள்ளனர்.

பொதுமக்கள் வசிக்கும் கிராம பகுதிகளுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவிவிடக்கூடாது என்பதற்காக போஸ் கிரீரி பகுதியில் கூடுதலாக பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

ராணுவ அதிகாரி விரைந்தார்

நேற்று முன்தினம் வடக்கு மண்டல ராணுவ கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் திவிவேதி, தேடுதல் வேட்டை நடக்கும் பகுதிக்கு நேரில் வந்து, ஆபரேஷன் நிலவரம் குறித்து ஆராய்ந்தார். அவருக்கு தேடுதல் வேட்டையில் பயன்படுத்தப்படும் அதிநவீன கருவிகள் மற்றும் தாக்குதல் நுட்பங்கள் விளக்கி காட்டப்பட்டன.

"வனப்பகுதி முழுமையும் தேடுதல் வேட்டை பலப்படுத்தப்பட்டு பாதுபாப்பு படையினர் முற்றுகையிட்டு இருப்பதால், பொறியில் சிக்கிய 3 பயங்கரவாதிகள் பிடிபட்டிருக்கலாம் அல்லது வீழ்த்தப்பட்டிருக்கலாம்" என்று போலீசார் தெரிவித்தனர். அதுகுறித்த தகவல்களை பாதுகாப்பு படையினர் பின்னர் வெளியிடுவார்கள் என்று தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்