ஜீன்ஸ் உடை, முக கவசம்,,, தலைப்பாகை இன்றி டெல்லியில் சுற்றி திரிந்த அம்ரித்பால் சிங்

வாரீஸ் பஞ்சாப் டே தலைவர் அம்ரித்பால் சிங் தலைப்பாகை இன்றி, ஜீன்ஸ், முக கவசம் அணிந்தபடி டெல்லி தெருக்களில் சுற்றி திரிந்த வீடியோ காட்சிகள் வெளிவந்து உள்ளன.

Update: 2023-03-28 14:48 GMT

புதுடெல்லி,

பஞ்சாப்பில் வாரீஸ் பஞ்சாப் டே என்ற அமைப்பை தலைமையேற்று நடத்தி வரும் அம்ரித்பால் சிங் என்பவர், போலீசார் பிடித்து சென்ற தனது நெருங்கி கூட்டாளியான லவ்பிரீத் சிங் என்பவரை மீட்க, அஜ்னாலா காவல் நிலையத்திற்குள் தடையை மீறி, தடுப்பான்களை உடைத்து கொண்டு அத்துமீறி உள்ளே புகுந்தது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி இருந்தது.

இந்த விவகாரத்தில், அவரது ஆதரவாளர்கள் பயங்கர ஆயுதங்கள், நவீன ரக துப்பாக்கிகள் ஆகியவற்றுடன் வந்திருந்தனர். அவர்களை தடுக்க முற்பட்ட போலீஸ் சூப்பிரெண்டு அளவிலான காவல் அதிகாரிகள் உள்பட 6 போலீசார் காயமடைந்தனர்.

சட்டம் மற்றும் ஒழுங்கு விவகாரம் எழுந்து உள்ளது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கிய நிலையில், இந்த விவகாரத்தில் தனிப்படை அமைத்து போலீசார் சிங்கை தேடி வந்தனர். எனினும், அவர் போலீசில் சிக்கவில்லை.

இதனால், அவர் தப்பியோடிய குற்றவாளியாக கடந்த 19-ந்தேதி போலீசாரால் அறிவிக்கப்பட்டு உள்ளார். எனினும், அவரை தேடும் பணி தொடர்ந்தது.

இந்நிலையில், வாரீஸ் பஞ்சாப் டே தலைவர் அம்ரித்பால் சிங் தலைப்பாகை இன்றி, ஜீன்ஸ், கூலிங் கிளாஸ் மற்றும் அடையாளம் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக முக கவசம் அணிந்தபடி டெல்லி தெருக்களில் சுற்றி திரிந்த வீடியோ காட்சிகள் வெளிவந்து உள்ளன.

அவரது கூட்டாளியான பப்பல்பிரீத் சிங் ஒரு பையை சுமந்தபடி உடன் நடந்து செல்கிறார். இதனை போலீசார் உறுதி செய்து உள்ளனர்.

அதற்கு முன்பு, தனது சொந்த பாஸ்போர்ட் கொண்டோ அல்லது போலி பாஸ்போர்ட் உதவியுடனோ நேபாள நாட்டின் வழியே வேறொரு நாட்டுக்கு அம்ரித்பால் சிங் தப்பி சென்று விட கூடாது என்பதற்காக நேபாள விமான நிலையத்தில் அதிகாரிகள் இன்று உஷார்படுத்தப்பட்டனர்.

இந்திய அரசு கேட்டு கொண்டதன் பேரில் நேபாள அரசு எல்லாவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் இன்று எடுத்து இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்