குடும்ப கட்சிகளுக்கு இடையே, இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் அரசியல் கட்சியாக பா.ஜ.க. உள்ளது: பிரதமர் மோடி பேச்சு
2-ல் இருந்து 303 மக்களவை தொகுதிகளாக வெற்றி பயணம் தொடருகிறது என பா.ஜ.க. மத்திய அலுவலக விரிவாக்க விழாவில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில், புதிதாக கட்டப்பட்டு உள்ள பா.ஜ.க. மத்திய அலுவலக (விரிவாக்கம்) திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், 1984-ம் ஆண்டில் 2 மக்களவை தொகுதிகளுடன் தொடங்கிய கட்சியின் பயணம் 2019-ம் ஆண்டில் 303 தொகுதிகளாக அதன் வெற்றி அமைந்து உள்ளது. அது எண்ணம் மற்றும் கருத்துகளின் விரிவாக்கத்திற்கான ஊக்கமளிக்கும் பயணம் ஆக இருந்துள்ளது.
இது ஒரு கட்டிடத்தின் விரிவாக்கம் என்றில்லாமல், ஒவ்வொரு தொண்டரின் எண்ணங்களின் விரிவாக்கமும் கூட ஆகும். கோடிக்கணக்கான தொண்டர்கள் மற்றும் கட்சியின் நிறுவன உறுப்பினர்களின் முன் தலை வணங்குகிறேன் என கூறியுள்ளார்.
கட்சியின் 44-வது நிறுவன நாள் வரவுள்ள நிலையில், அதனை குறிப்பிட்டு அது ஒரு களைப்பற்ற மற்றும் தொடர்ச்சியான பயணம் ஆக இருக்கும்.
கடின உழைப்பின் உச்சம், அர்ப்பணிப்பு மற்றும் தீர்மானங்களின் உச்சம், எண்ணங்களின் விரிவாக்கம் மற்றும் கொள்கைகள் ஆகியவற்றை கட்சி கொண்டதுடன், அதிக ஊக்கமளிக்க கூடிய வகையில் உள்ளது என்று கூறியுள்ளார்.
குடும்பம் நடத்த கூடிய அரசியல் கட்சிகளுக்கு இடையே, இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் அரசியல் கட்சியாக பா.ஜ.க. உள்ளது. நெருக்கடி காலத்தில், ஜனநாயகம் காப்பாற்றப்பட, தன்னையே தியாகம் செய்ய கட்சி முன்வந்தது என்றும் பிரதமர் மோடி பேசியுள்ளார்.