நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நுபுர் சர்மாவுக்கு கவுதம் கம்பீர் ஆதரவு
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு கவுதம் கம்பீர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இஸ்லாமியர்களின் இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து பா.ஜ.க. செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மாவும், நவீன் ஜிண்டாலும் ஆட்சேபகரமான கருத்துகளை வெளியிட்டு, அது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அவர்களை கைது செய்ய வலியுறுத்தி கடந்த வெள்ளிக்கிழமை நாட்டின் பல இடங்களில் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர். நுபுர் சர்மாவுக்கு எதிராக பல்வேறு இடங்களில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நுபுர்சர்மாவுக்கு ஆதரவாக பாஜக எம்.பியும் பிரபல கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீர் கருத்து வெளியிட்டுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கவுதம் கம்பீர் கூறியிருப்பதாவது;-
" தனது கருத்துக்கு மனிப்பு கேட்ட பிறகும் ஒரு பெண்ணுக்கு எதிராக நாடு முழுவதும் வெறுப்பு மற்றும் மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்படும் மோசமான நிலையைக் கண்ட பிறகு அமைதியாக இருக்கும் "மதச்சார்பற்ற தாராளவாதிகள்' என கூறிக்கொள்பவர்களின் மவுனம் நிச்சயமாக கேளாத தன்மை போன்றதுதான்" எனசாடியுள்ளார்.
நுபுர் சர்மாவின் கருத்துக்கு இஸ்லாமிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பாஜக அவரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.