பீகார் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஐதராபாத்துக்கு அனுப்பி வைப்பு
பா.ஜனதாவின் குதிரை பேர முயற்சியை தடுக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஐதராபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பாட்னா,
பீகாரில் காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரீய ஜனதா தளம் உடனான மெகா கூட்டணியின் ஆதரவுடன் முதல்-மந்திரியாக பதவி வகித்து வந்த நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்து, பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்றார்.
நிதிஷ் குமார் தலைமையில் புதிய ஆட்சி அமைந்துள்ளதால் அவர் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டயாம் ஏற்பட்டுள்ளது. அதன்படி வருகிற 12-ந் தேதி பீகார் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவுள்ளது.
இந்த நிலையில் பீகார் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நேற்று தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மொத்தம் உள்ள 19 எம்.எல்.ஏ.க்களில் 3 பேரை தவிர 16 பேர் ஐதராபாத் அழைத்து செல்லப்பட்டு அங்குள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் பா.ஜனதா குதிரை பேரத்தில் ஈடுபடலாம் என்பதால் காங்கிரஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே ஜார்கண்டில் புதிதாக பதவியேற்றுள்ள ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் சம்பாய் சோரன் தலைமையிலான அரசு மீது இன்று (திங்கட்கிழமை) நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. இதையொட்டி ஐதராபாத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நேற்று இரவு ராஞ்சிக்கு திரும்பினர்.