அம்பானி, அதானியை விட ஒருகாலத்தில் பெரிய பணக்காரர்... இன்று வாடகை வீட்டில் வசிக்கும் அவலம்

கவுதம் சிங்கானியாவுடன் சிறிய நிலம் பற்றி ஏற்பட்ட விவாதம் முற்றியதில், விஜய்பத் வீட்டில் இருந்து துரத்தப்பட்டார். அதன்பின்னர், அவர் வாடகை பிளாட் ஒன்றில் தங்கி வருகிறார்.;

Update:2024-05-16 16:36 IST

புதுடெல்லி,

ஆடை உலகில் பெரிய புரட்சியை ஏற்படுத்திய நிறுவனங்களில் ரேமண்ட் குழும நிறுவனமும் ஒன்று. உயர்ரக ஆடைகளை தயாரித்து அவற்றை விற்பனைக்கு கொண்டு வந்தது. பெரிய பணக்காரர்கள் அணிய கூடிய பல்வேறு வடிவிலான, வகையிலான ஆடைகளை உற்பத்தி செய்து வருகிறது. உலக அளவில் ஆடை தயாரிப்பில் முன்னணி நிறுவனம் என்ற பெருமை பெற்றுள்ளது.

இந்த நிறுவனத்தின் சந்தை முதலீடு ரூ.14,280 கோடியாக உள்ளது. ரேமண்ட் குழும நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக கவுதம் சிங்கானியா இருந்து வருகிறார். ஆனால், இவருடைய தந்தை விஜய்பத் சிங்கானியாவை பற்றி பரவலாக பலருக்கும் தெரியாது. அவர் ஒரு காலத்தில் மிக பெரிய பணக்காரராக இருந்தவர்.

ரேமண்ட் சாம்ராஜ்ஜியம் முழுவதற்கும் தலைமை வகித்தவர். அனில் அம்பானி, முகேஷ் அம்பானி, கவுதம் அதானி மற்றும் பிற பிரபல கோடீசுவரர்களை விட பெரிய பணக்காரராக இருந்தவர். ஆனால், இன்றோ அவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலைக்கு அவரை கொண்டு சென்றது வேறு யாரும் அல்ல. அவர் எடுத்த முடிவே அவருக்கு எதிராக அமைந்தது.

விஜய்பத் தன்னுடைய நிறுவனத்தின் பங்குகள் எல்லாவற்றையும் கவுதமிடம் கொடுத்துள்ளார். இதுவே அவருடைய சரிவுக்கான தொடக்கம். ஒரு கட்டத்தில், கவுதமுடன் சிறு நில பகுதி பற்றி ஏற்பட்ட விவாதம் முற்றியதில், விஜய்பத் வீட்டில் இருந்து துரத்தப்பட்டார். அதன்பின்னர், அவர் வாடகை பிளாட் ஒன்றில் தங்கி வருகிறார்.

ஆரம்ப காலத்தில், விஜய்பத் இளைஞராக இருந்தபோது, குடும்ப சண்டையில் அவர் சிக்கி கொண்டார். அவருடைய மாமா மரணம் அடைந்ததும், மாமாவின் மகன்கள் ரேமண்ட் குழுமத்தின் மீது ஆதிக்கம் செலுத்தி அதனை பறிக்க முயன்றனர் என விஜய்பத் நினைவுகூர்கிறார்.

இரு மகன்களுக்கு, ரேமண்ட் குழுமத்தின் உரிமையை பிரித்து கொடுக்க நினைப்பதற்கு முன் வரை எல்லாம் நன்றாகவே போய் கொண்டிருந்தது என்று அவர் கூறுகிறார். ஆனால், விஜய்பத்தின் மகன்களில் ஒருவரான மதுபதி சிங்கானியா குடும்பத்துடனான உறவை முறித்து கொண்டு சிங்கப்பூர் சென்று விட்டார்.

இந்நிலையில், வாழ்க்கை தரம் மேம்படவும் மற்றும் ஒரு மதிப்புமிக்க வாழ்வை நடத்தி செல்வதற்கும் போராடி வருகிறேன் என்று விஜய்பத் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

கவுதம் சிங்கானியா கார்கள் மீது அதிக விருப்பம் கொண்டவர். இதுபற்றிய செய்திகள் அடிக்கடி வெளிவரும். சமீபத்தில் மெக்லாரன் 750எஸ் ரக புதிய கார் ஒன்றை அவர் வாங்கினார். கார் பிரியரான அவருடைய கார் தொகுப்புகளில் இது 3-வது மெக்லாரன் வகை கார் ஆகும்.

Tags:    

மேலும் செய்திகள்