நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆடி அசத்திய ஜி-20 வெளிநாட்டு குழு; வைரலான வீடியோ

ஆஸ்கார் விருது வென்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஜி-20 வெளிநாட்டு குழுவினர் நடனம் ஆடி அசத்தி உள்ளனர்.

Update: 2023-03-30 07:24 GMT

புதுடெல்லி,

இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவத்தின் கீழான வேளாண் பணி குழுவின் 2-வது வேளாண் குழுவினர் கலந்து கொண்ட கூட்டம் பஞ்சாப்பின் சண்டிகரில் நடந்தது. இதில், வெளிநாட்டு குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, உள்ளூர் நடன கலைஞர்கள் ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற, ஆஸ்கார் விருது வென்ற நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆடினர்.

இதனை பார்த்த வெளிநாட்டு குழுவை சேர்ந்த ஆண், பெண் உயரதிகாரிகள் அவர்களும் ஆர்வத்தில் பாடலுக்கு நடனம் ஆடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதுபற்றிய வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.

டைரக்டர் எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் தயாரான 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் வெளியானது. நடிகா்கள் ராம்சரண், ஜூனியா் என்.டி.ஆர். உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம், மிக பெரிய வெற்றி பெற்றது.

உலக அளவில் ரூ.1,000 கோடிக்கும் கூடுதலாக வசூலித்து சாதனை படைத்தது. இந்த திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கான பல்வேறு பிரிவுகளில் விண்ணப்பித்திருந்த நிலையில், 'ஒரிஜினல் பாடல்' என்ற விருதின் பிரிவில் 15 பாடல்களில் ஒன்றாக இறுதி பட்டியலுக்கு தேர்வானது.

எம்.எம். கீரவாணி இசையமைப்பில் உருவான இந்த பாடலை, ராகுல் மற்றும் கால பைரவா பாடியிருந்தனர். இந்த பாடலில் ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ராம் சரணின் நடனம், பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற 95-ஆவது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் டைரக்டர் எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் வெளியான 'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கார் விருது வென்றது.

விழாவில் இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் அந்த பாடலை எழுதிய சந்திரபோஸ் ஆகியோர் ஆஸ்கார் விருது பெற்று கொண்டனர். இதனால் ரசிகர்கள், திரையுலகினர் உற்சாகமடைந்தனர். அதற்கு முன்பு, ஆஸ்காருக்கு அடுத்தபடியாக உயரிய விருது என கருதப்படும் கோல்டன் குளோப்ஸ் விருதும் வென்று, 'நாட்டு நாட்டு' பாடல் இந்திய திரை உலகத்திற்கு பெருமை சேர்த்து இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்