வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு ரூ.48¾ கோடி நிதி ஒதுக்கீடு

குடகில் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு ரூ.48¾ கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அப்பச்சு ரஞ்சன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-20 18:45 GMT

குடகு:-

குண்டும், குழியுமான சாலை

குடகு மாவட்டம் மடிகேரி தாலுகா மற்றும் மங்களா தேவிநகர், செயின்ட் கேட் வார்டு, பொதுப்பணித்துறை குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாலைகள் பெயர்ந்து குண்டு குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மழை நேரங்களில் வாகன ஓட்டிகள் பயணிக்கும்போது, விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.

இதனால் இந்த சாலைகளை சீரமைத்து கொடுக்கவேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் தாலுகா, கிராம பஞ்சாயத்து நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்ைல. இதனால் கிராம மக்கள் நேரடியாக எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைக்க முன் வந்தனர்.

எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை

இந்நிலையில் நேற்று தொகுதி எம்.எல்.ஏ. அப்பச்சு ரஞ்சன் சென்று பொதுமக்களின் நிறை குறைகளை கேட்டறிந்தார். அப்போது தேச்சூர் பகுதி மக்கள் தங்கள் பகுதியில் போடப்பட்ட சாலை மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அதன் பின்னர் எந்த சாலையும் அமைக்கவில்லை என்று கூறினர். மேலும் சில இடங்களில் உள்ள கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் செல்ல முடியாமல் சாலையில் வழிதோடுகிறது.

இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே முறையான, சுகாதாரமான வளர்ச்சி திட்டப்பணிகளை செய்து கொடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை அப்பச்சு ரஞ்சன் கேட்டு கொண்டதுடன் இன்னும் 15 நாட்களுக்குள் சாலைகள் அமைத்து கொடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

நிதி ஒதுக்கீடு

மேலும் நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.40 கோடியும், 15-வது நிதித் திட்டத்தின் கீழ் ரூ.5 கோடியும், தேசிய பேரிடர் படையில் இருந்து ரூ.3 கோடியும், சிறப்பு மானியத்தின் கீழ் ரூ.75 லட்சமும் கிடைத்துள்ளது. இந்த பணத்தை கொண்டு வளர்ச்சி திட்டப்பணிகள் முடிக்கப்படும் என்றார்.

பின்னர் மங்களாதேவி நகரில் நடைபெறும் பிரமாண்ட கட்டிட பணிகளை பார்வையிட்ட அவர், இந்த கட்டித்திற்கு யார் அனுமதி வழங்கியது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சில கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. மேலும் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. எனவே மீண்டும் இந்த பணிகளை தொடர்ந்து நடத்த கூடாது என்று உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்