எந்த மொழி பேசினாலும் கர்நாடகத்தில் வசிக்கும் அனைவரும் கன்னடர்களே

எந்த மொழி பேசினாலும் கர்நாடகத்தில் வசிக்கும் அனைவரும் கன்னடர்களே என்று ரூபாகலா சசிதர் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-01 20:27 GMT

கோலார் தங்கவயல்-

கன்னட ராஜ்யோத்சவா கொண்டாட்டம்

கோலார் தங்கவயல் நகரசபை மைதானம் அருகே உள்ள கன்னட சங்க கட்டிட வளாகத்தில் 67-வது கன்னட ராஜ்யோத்சவா விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ரூபாகலா சசிதர் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். மேலும் தங்கவயல் போலீஸ் சூப்பிரண்டு தரணி தேவி, கன்னட கொடியை ஏற்றினார். இந்த விழாவில் நகரசபை தலைவர் வள்ளல் முனிசாமி, தாசில்தார் சுஜாதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் போலீஸ் சூப்பிரண்டு தரணி தேவி பேசுகையில், கர்நாடகத்தில் வாழும் ஒவ்வொருவரும் கன்னட மொழியை கற்க வேண்டியது அவசியம். அப்போது தான் நாம் எங்கு சென்றாலும் அனைவருடனும் நட்பாக இருக்க முடியும் என்றார்.

அனைவரும் கன்னடர்களே...

ரூபாகலா சசிதர் எம்.எல்.ஏ. பேசுகையில், எந்த மொழி பேசினாலும் கர்நாடகத்தில் வசிக்கும் அனைவரும் கன்னடர்களே. அவர்களும் இந்த மண்ணின் மைந்தர்கள் தான். அவர்களை பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமையாகும். கர்நாடக மண்ணில் பிறந்தவர்கள் ஒற்றுமையுடன் இருந்து உரிமையை பாதுகாக்க வேண்டும். பிழைப்பு தேடி வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களை அரவணைக்க வேண்டும். அவர்களுக்கும் கன்னடம் கற்று கொள்ள வேண்டும். அப்போது தான் கன்னட மொழி வளர்ச்சி அடையும். மற்ற மொழி பேசுபவர்களை நாம் சகோதரர்களாக பார்க்க வேண்டும். அவர்களிடம் வேற்றுமையை காட்டக்கூடாது என்றார்.

நகரசபை தலைவர் வள்ளல் முனிசாமி பேசுகையில், எனது பெற்றோர் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும், நான் பிறந்து வளர்ந்தது கர்நாடகத்தில் தான். எனவே நான் கர்நாடகத்துக்கு எப்போதும் விசுவாசமாக இருப்பேன் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்