இலவச திட்ட வழக்கை நாட்டின் நலன்கருதியே விசாரிக்கிறோம் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி
இலவச திட்ட வழக்கை நாட்டின் பொருளாதார நலன் கருதியே விசாரிக்கிறோம் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்தார்.;
இலவச அறிவிப்பு
இலவச திட்டங்கள் அறிவிக்கப்படுவதை முறைப்படுத்த கோரி அஸ்வினி குமார் உபாத்யாய் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் நடந்து வருகிறது.
இதன்படி நேற்று நடைபெற்ற விசாரணையின்போது தலைமை நீதிபதி கூறியதாவது:-
பொருளாதார நலன் கருதி...
எந்தவொரு அரசின் கொள்கைக்கும், திட்டத்துக்கும் சுப்ரீம் கோர்ட்டு விரோதமாக இல்லை. மாநில அரசுகள் இலவச திட்ட அறிவிப்புகளை வெளியிட தடை விதித்து மத்திய அரசு ஒருவேளை சட்டம் இயற்றினால், மத்திய அரசு என்ன சட்டம் வேண்டும் என்றாலும் இயற்றி கொள்ளட்டும் என்றோ, அது விசாரணைக்கு உட்படுத்த முடியாது என்று கூற முடியுமா?.
நாட்டின் பொருளாதார நலன் கருதியே இந்த விவகாரத்தை விசாரிக்கிறோம். இலவச திட்டத்தையும், சமூக நல திட்டத்தையும் வேறுபடுத்தி பார்க்க வேண்டும்.
சில மாநிலங்கள் ஏழைகளுக்கும், பெண்களுக்கும் சைக்கிள் வழங்குகின்றன. அவற்றால் அவர்களின் வாழ்வுமுறை மேம்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சைக்கிள்களையும், படகுகளையும் கிராமப்புற ஏழைகள் சார்ந்திருக்காலம். அவற்றை இங்கு அமர்ந்து கொண்டு விவாதிக்க முடியாது.
இவ்வாறு தலைமை நீதிபதி தெரிவித்தார்.
வாக்காளரின் பாக்கெட்டில் இருந்து நிதி
அப்போது மூத்த வக்கீல் கபில்சிபல், 'இந்த விவகாரத்தை அரசியல்ரீதியாக கையாளக்கூடாது. மாநிலத்துக்கு ஒதுக்கப்படும் நிதியை காட்டிலும் செலவினத்துக்கும் குறைந்த வரவுநிலை 3 சதவீதத்தை தாண்டும் பட்சத்தில் அடுத்த நிதியாண்டில் மாநிலத்துக்கு ஒதுக்கும் நிதியை மத்திய நிதி கமிஷன் குறைக்கலாம்' என யோசனை தெரிவித்தார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் விகாஸ் சிங், 'இலவச அறிவிப்பு திட்டங்கள் சமவாய்ப்புகளை பாதிக்கின்றன. இலவச குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டாம் என யாரும் சொல்லவில்லை. இலவச திட்ட அறிவிப்புகளுக்கான நிதி வாக்காளர்களின், வரி செலுத்துவோரின் பாக்கெட்டில் இருந்து செல்கிறது என்பதை அறிந்துகொள்ளும் உரிமை உள்ளது' என்று தெரிவித்தார்.
மற்றொரு மனுதாரரின் வக்கீல் விஜய் ஹன்சாரியா வாதிடுகையில், 'நாட்டின் பொருளாதார ஒழுங்கை சீர்குலைக்க அரசியல்கட்சிகளை அனுமதிக்க கூடாது' என வாதிட்டார்.
இலவச கலர் டி.வி.
அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார்மேத்தா, 'சமூக நலத்திட்டங்கள் மீது எவ்வித புகாரும் இல்லை. இலவச சேலைகள், இலவச கலர் டி.வி. போன்ற அத்தியாவசியமற்றதை ஒரு கட்சி வழங்கும்போது மட்டுமே பிரச்சினையாக பார்க்க வேண்டி உள்ளது.
நிதி ஆதாரம் இல்லாமல் பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதையோ, நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைப்பதையோ அனுமதிக்க முடியுமா?, அது அனுமதிக்கப்பட்டால் தீவிரமான பிரச்சினையாகி நாட்டின் பொருளாதாரம் சீர்குலையும்' என வாதிட்டார்.
ஆம் ஆத்மி கட்சி சார்பில் மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி, 'இலவச திட்ட வாக்குறுதிகளுக்கு தடை விதிக்க மனுதாரர்கள் கோருகின்றனர். ஆனால் பேச்சு, கருத்துரிமைக்கு எதிராக அமைந்துவிடும். இலவச திட்ட வாக்குறுதிகளுக்கு கோர்ட்டு தடை விதிக்க முடியுமா?' என கேட்டார்.
அப்போது தலைமை நீதிபதி, 'தேர்தலின்போது வாக்குறுதிகளை அளிக்க வேண்டாம் என கட்சிகளுக்கு எப்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட முடியும்?' என்று கேட்டார்.
தி.மு.க. அறிவார்ந்த கட்சி என நினைக்காதீர்
இதைத்தொடர்ந்து தி.மு.க. சார்பில் மூத்த வக்கீல் வில்சன் வாதாட முயன்றார். அப்போது தலைமை நீதிபதி, 'நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி (தி.மு.க.) குறித்து நிறைய கூற வேண்டும் என விரும்புகிறேன்.
தலைமை நீதிபதி என்பதால் அவற்றை கூறாமல் அடக்கி கொள்கிறேன். தி.மு.க. மட்டும்தான் அறிவார்ந்த கட்சி என நினைக்க வேண்டாம். உங்கள் கட்சி நடந்து கொள்கிற விதம், பேசும் விதம் ஆகியவற்றை நாங்கள் கண்டும் காணாமல் இருக்கிறோம் என நினைக்க வேண்டாம்' என தெரிவித்தார்.
தமிழக நிதி அமைச்சர் கருத்து
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கோபால் சங்கரநாராயணன், 'தமிழக நிதி அமைச்சர் சுப்ரீம் கோர்ட்டுக்கு எதிராக டெலிவிஷன்களில் தெரிவித்த கருத்துக்களை பார்த்தோம், அவர் தெரிவித்த கருத்துக்கள் சரியில்லை' என வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்க இன்று (புதன்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.