இந்து மதம் குறித்து சர்ச்சை கருத்து கூறிய சதீஸ் ஜார்கிகோளிக்கு எதிராக மாநிலம் முழுவதும் பா.ஜனதாவினர் தீவிர போராட்டம்

இந்து மதம் குறித்து சர்ச்சை கருத்து கூறிய காங்கிரஸ் செயல் தலைவர் சதீஸ் ஜார்கிகோளிக்கு எதிராக மாநிலம் முழுவதும் பா.ஜனதாவினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூருவில் உருவபொம்மை எரிக்கப்பட்டதுடன், போலீசாருடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-11-09 18:45 GMT

பெங்களூரு:

சதீஸ் ஜார்கிகோளி சர்ச்சை கருத்து

கர்நாடக மாநில காங்கிரஸ் செயல் தலைவராக இருந்து வருபவர் சதீஸ் ஜார்கிகோளி. இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெலகாவி மாவட்டம் நிப்பானியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, இந்து மதம் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மநதிரி எடியூரப்பா உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் சதீஸ் ஜார்கிகோளியின் கருத்துக்கு, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூட எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அதே நேரத்தில் இந்து மதம் குறித்து சர்ச்சை கருத்து கூறிய சதீஸ் ஜார்கிகோளி தனது கருத்தை திரும்ப பெற வேண்டும், மேலும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜனதா தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

போலீசாருடன் வாக்குவாதம்

ஆனால் தான் கூறிய கருத்துக்காக ஒரு போதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சதீஸ் ஜார்கிகோளி திட்டவட்டமாக கூறியுள்ளார். இதையடுத்து, சதீஷ் ஜார்கிகோளிக்கு எதிராக பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் நேற்று பா.ஜனதாவினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூரு மைசூரு வங்கி சர்க்கிளில் பா.ஜனதாவின் இளைஞரணி சார்பில் சதீஸ் ஜார்கிகோளிக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.

அப்போது அவரது உருவபொம்மையை எரித்தும், சாலையில் உருண்டும் பா.ஜனதாவினர் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். அவர்களை போலீசார் தடுத்தனர். இதனால் போலீசாருடன், பா.ஜனதாவினர் வாக்குவாதம் செய்தார்கள். மேலும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதன்காரணமாக அங்கு பரபரப்பு உண்டானது.

உருவபொம்மை எரிப்பு

இதுபோல், பெலகாவி மாவட்டம் சென்னம்மா சர்க்கிளிலும் சதீஸ் ஜார்கிகோளிக்கு எதிராக பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வைத்து சதீஸ் ஜார்கிகோளியின் உருவபொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பை பா.ஜனதாவினர் வெளிப்படுத்தினார்கள். பின்னர் சென்னம்மா சர்க்கிளில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை பா.ஜனதாவினர் ஊர்வலமாக சென்றார்கள். அப்போது சதீஷ் ஜார்கிகோளிக்கு எதிரான வாசகங்கள் அடக்கிய பதாதகைகளை பா.ஜனதாவினர் கையில் வைத்தபடி ஊர்வலகமாக சென்றார்கள்.

இதுபோன்று, மைசூரு, சிவமொக்கா, பாகல்கோட்டை, துமகூரு, ஹாவேரி, சிக்பள்ளாப்பூர், கோலார், விஜயாப்புரா, பல்லாரி உள்பட மாநிலம் முழுவதும் சதீஸ் ஜார்கிகோளிக்கு எதிராக பா.ஜனதாவினர் தீவர போராட்டத்தில் ஈடுபட்டதுடன், இந்து மதம் குறித்து பேசியதற்காக அவர் மன்னிப்பு கேட்டே தீர வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்