ஏர் இந்தியா-ஏர்பஸ் ஒப்பந்தம் விமானத் துறையில் இந்தியாவின் வெற்றியைப் பிரதிபலிக்கிறது: பிரதமர் மோடி
ஏர் இந்தியா-ஏர்பஸ் ஒப்பந்தம் விமானத் துறையில் இந்தியாவின் வெற்றியைப் பிரதிபலிக்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
ஏர் பஸ் நிறுவனத்திடம் இருந்து, 250 விமானங்களை ஏர் இந்தியா வாங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடியும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் கலந்து கொண்டனர்.
இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
இந்தியா பிரான்ஸ் இடையில் உள்ள ஆழமான உறவையும், விமான போக்குவரத்தில் இந்தியாவின் வெற்றியையும், இந்த ஒப்பந்தம் காட்டுகிறது. உதான் திட்டத்தின் கீழ், இந்தியாவில் உள்ள நீண்ட தூரத்தில் உள்ள நகரங்கள் வான் போக்குவரத்து மூலம் இணைக்கப்படுகிறது.
இது பொருளாதாரத்திற்கும், மக்களின் சமூக வளர்ச்சிக்கும் உதவுகிறது. விமானத்துறை தொடர்பான பாகங்கள் உற்பத்தி துறையில், 'மேக் இன் இந்தியா- மேக் பார் வோர்ல்ட்' கொள்கையின் கீழ் ஏராளமான வாய்ப்புகள் இந்தியாவில் உள்ளன.
இந்தோ பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை ஆகட்டும், சர்வதேச உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதார பாதுகாப்பு ஆகட்டும், இந்தியாவும், பிரான்சும் ஒருங்கிணைந்து நேர்மறையான பங்களிப்பை அளிக்கின்றன. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.