42 ஆயிரம் கம்பளி தொப்பிகள் தயாரித்து விமானப்படை அதிகாரிகள் மனைவியர் கின்னஸ் சாதனை

42 ஆயிரம் கம்பளி தொப்பிகளை 3 மாத காலத்தில் தயாரித்து காட்சிப்படுத்தி விமானப்படை அதிகாரிகள் மனைவியர் கின்னஸ் சாதனை படைத்தனர். அவர்களை ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கவுரவித்தார்.

Update: 2022-10-15 17:08 GMT

கின்னஸ் சாதனை

டெல்லியில் இந்திய விமானப்படை அதிகாரிகள் மனைவியர் நலச்சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் விமானப்படை அதிகாரிகளின் மனைவியர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த அமைப்பின் 3 ஆயிரம் உறுப்பினர்கள், 3 மாத காலத்தில் நிட்டாதான் என்ற பெயரில் ஒரு இயக்கம் நடத்தி, முகாம்களில் இந்த 42 ஆயிரம் கம்பளி தொப்பிகளை தயாரித்து டெல்லியில் காட்சிப்படுத்தி உள்ளனர்.

இது கின்னஸ் சாதனை ஆகும்.

ராஜ்நாத் சிங் கவுரவம்

இதையொட்டி டெல்லியில் இந்திய விமானப்படை ஆடிட்டோரியத்தில் நேற்று நடந்த விழாவில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு, கின்னஸ் சாதனை படைத்த விமானப்படை அதிகாரிகள் மனைவியர் சங்கத்தினரை கவுரவித்தார்.

இந்திய விமானப்படை அதிகாரிகள் மனைவியர் நலச்சங்கத்தினர் செய்துள்ள கின்னஸ் சாதனையை அவர் மனதார பாராட்டினார்.

ஏழைகளுக்கு வழங்கப்படும்

விழாவில், இந்திய விமானப்படை அதிகாரிகள் மனைவியர் நலச்சங்கத்தின் தலைவர் நீட்டா சவுத்ரி பேசும்போது, "இந்த தொப்பிகள் அனைத்தும் வரும் குளிர்காலத்தில் கடும் குளிரில் இருந்து தங்களை காத்துக்கொள்வதற்கு வீடற்றோருக்கும், ஏழைகளுக்கும் வழங்கப்படும். குளிர்காலத்தில் ஏழைகளுக்கும், வீடற்றோருக்கும் ஏதாவது ஒன்றை செய்தாக வேண்டும் என்ற நோக்கத்தில் இதை ஒரு இயக்கமாக தொடங்கினோம். ஆரம்பத்தில் 4 அல்லது 5 பெண்கள் தான் இருந்தோம். பின்னர் இது 3 ஆயிரம் என்ற அளவை எட்டியது" என குறிப்பிட்டார்.

கின்னஸ் உலக சாதனையின் நடுவர் ரிஷி நாத் கூறுகையில், ''அதிக எண்ணிக்கையிலான பின்னப்பட்ட கம்பளி தொப்பிகளை காட்சிப்படுத்தியதற்காக இந்த சாதனை அற்புதமாக உள்ளது" என தெரிவித்தார்.

இவர்கள் நடத்திய கலை விழாவில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு துறை மந்திரி ஸ்மிரிதி இரானி கலந்துகொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்