222 பயணிகளுடன் வந்த விமானத்தில் எந்திரக் கோளாறு; கொச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கம் - பெரும் விபத்து தவிர்ப்பு!

நடுவானில் ஏர் அரேபியா விமானத்தில் எந்திரக் கோளாறு ஏற்பட்டதால் கொச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

Update: 2022-07-15 15:54 GMT

கொச்சி,

நடுவானில் ஏர் அரேபியா விமானத்தில் திடீரென எந்திரக் கோளாறு ஏற்பட்டதால் கேரள மாநிலம் கொச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ஷார்ஜாவில் இருந்து 222 பயணிகளுடன் வந்த ஏர் அரேபியா விமானத்தில் திடீரென ஹைட்ராலிக் எந்திரக் கோளாறு ஏற்பட்டது. உடனே கொச்சி விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த விமானம் கொச்சி நோக்கி வந்த நிலையில், குறிப்பிட்ட நேரத்தில் தரையிறங்காமல் வானத்திலேயே பறந்து கொண்டிருந்தது. பின் சிறிது கால தாமதத்திற்கு பின்னர், விமானம் தரையிறங்க வசதியாக, ஓடுபாதை 09 ஒதுக்கப்பட்டு விமானம் தரையிறக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து கொச்சின் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் லிமிடெட் (சி ஐ ஏ எல்) நிர்வாகம் கூறியதாவது:-

ஏர் அரேபியா விமானம் ஹைட்ராலிக் கோளாறு ஏற்பட்டு கொச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. இங்கு இரவு 7.13 மணிக்கு தரையிறங்க வேண்டிய ஏர் அரேபியா ஜி9-426 என்ற விமானத்தில் ஹைட்ராலிக் செயலிழப்பு ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின், அந்த விமானம் சற்று தாமதமாக, இரவு 7.29 மணிக்கு ஓடுபாதை 09 இல் பாதுகாப்பாக தரையிறங்கியது. விமானத்தில் இருந்த 222 பயணிகள் மற்றும் 7 பணியாளர்கள் உட்பட அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.

எனினும், விமான நிறுவனத்திடம் இருந்து உடனடியாக எந்த பதிலும் வரவில்லை. எந்திரக் கோளாறு ஏற்பட்டாலும் சாதுரியமாக செயல்பட்டு விமானத்தை விமானிகள் பத்திரமாக தரையிறக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்