எய்ம்ஸ் சர்வரில் ஹேக்கர்கள் கைவரிசை; நாட்டின் இணைய பாதுகாப்பில் கேள்விகளை எழுப்புகிறது - காங்கிரஸ் விமர்சனம்
ஹேக்கர்களால் எய்ம்ஸ் சர்வர் முடக்கப்பட்ட நிலையில், நாட்டின் இணைய பாதுகாப்பு குறித்து காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.;
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் கடந்த 23-ஆம் தேதி திடீரென இணைய சேவை பாதிக்கப்பட்டது. இதனால் நோயாளிகளுக்கு கணினி சீட்டு வழங்க முடியவில்லை. அனைத்து எழுத்து வேலைகளும் கைகளாலேயே நடந்தது. இதனால் அனைத்து கவுண்ட்டர்களிலும் நீண்ட தூரத்துக்கு வரிசை காணப்பட்டது.
இணைய சேவை பாதிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரித்தபோது, மர்மநபர்கள் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் கணினி பயன்பாட்டுக்கான சர்வரை முடக்கிவிட்டதாக தெரியவந்தது. சர்வர் முடக்கம் குறித்து ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது.
மென்பொருள் மற்றும் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து ஒரு வாரமாக எய்ம்ஸ் சர்வர் செயலிழந்துள்ளதால், நோயாளி பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் எய்ம்ஸ் சர்வர் முடக்கப்பட்ட விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சி மத்திய அரசை விமர்சித்துள்ளது. இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;-
"எய்ம்ஸ் சர்வர் ஹேக்கர்களால் முடக்கப்பட்டு ஒரு வாரம் ஆகிறது. இது நாட்டின் இணைய பாதுகாப்பு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. 2020-ம் ஆண்டில் பிரதமர் மோடி விரைவில் புதிய சைபர் பாதுகாப்பு கொள்கையை கொண்டு வருவோம் என்று அறிவித்தார். 2 ஆண்டுகள் ஆகியும் இன்னும் காத்திருக்கிறோம்."
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.