மோடி பிரதமரான பிறகுதான் வடகிழக்கு மாநிலங்களில் வளர்ச்சி தொடங்கியது - மத்திய மந்திரி அமித்ஷா
சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்கள் சுற்றுலா தலமாக மட்டுமே கருதப்பட்டது என அமித்ஷா தெரிவித்தார்.
காங்டாக்,
மத்திய உள்துறைமந்திரி அமித்ஷா சிக்கிம் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தலைநகர் காங்டாகில் உள்ள கவர்னர் மாளிகையில் சர்தார் வல்லபாய் படேலின் சிலையை இன்று திறந்து வைத்தார்.
அதன்பின், காங்டாகில் நடைபெற்ற கிழக்கு மற்றும் வடகிழக்கு பிராந்தியங்களின் கூட்டுறவு பால் மாநாட்டில் பங்கேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "நரேந்திர மோடி அரசாங்கம் சுமார் 65 ஆயிரம் முதன்மை வேளாண்மை கடன் சங்கங்களை அமைக்க முடிவு செய்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்குள் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் ஒரு முதன்மை வேளாண்மை கடன் சங்கம் மற்றும் பால் பண்ணையை அமைக்க என முடிவு செய்துள்ளோம்.
சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளில், பிரதமராக நரேந்திர மோடி வருவதற்கு முன்பு, வடகிழக்கு மாநிலங்கள் சுற்றுலா தலமாக மட்டுமே கருதப்பட்டது. அவர் பிரதமரான பிறகுதான் வடகிழக்கு மாநிலங்களில் உண்மையான வளர்ச்சி தொடங்கியது." இவ்வாறு அவர் தெரிவித்தார்.