ஒரு மாதத்திற்கு பிறகு குடகில் கொட்டி தீர்த்த கனமழை

ஒரு மாதத்திற்கு பிறகு குடகில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Update: 2023-08-20 18:45 GMT

குடகு :-

கடும் வெயில்

கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனால் எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. இந்த நிலையில் ஜூலை மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து குடகு, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் கொட்டி தீர்த்தது.

இதனால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. சுமார் 2 வாரங்கள் கனமழை கொட்டியது. அதன்பிறகு மழை பெய்யவில்லை.

கடந்த ஒரு மாதமாக

மாநிலத்தில் சரியாக மழை பெய்யவில்லை. மாறாக கடுமையான வெயில் சுட்டெரித்து வந்தது. பருவமழை காலத்திலும் கோடைகாலம் போன்று வெயில் சுட்டெரித்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினார்கள்.

கொட்டி தீர்த்த கனமழை

மேலும் மழை குறைந்ததால் ஆறுகளிலும் தண்ணீர் குறைந்தது. மேலும் அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக குறைந்தது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாநிலத்தில் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.

மேற்கு ெதாடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குடகிலும் நேற்று முன்தினம் பலத்த மழை கொட்டி தீர்த்தது. பகலில் சுமார் ஒரு மணி நேரம் கொட்டிய மழையால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு குடகில் மழை பெய்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடுமையான வெயிலுக்கு மத்தியில், மழை பெய்ததால் உஷ்ணம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

விவசாயிகள் மகிழ்ச்சி

மாவட்டத்தில் மடிகேரி, சோமவார்பேட்டை, விராஜ்பேட்டை, பொன்னம்பேட்டை, குஷால்நகர் ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டியது. இரவிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் மழையை நம்பி விவசாயம் செய்த விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் குடகில் பலத்த மழை பெய்துள்ளதால் மண்டியாவில் உள்ள கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்