500 ஆண்டுகளுக்கு பின் அயோத்தியில் சிறப்புரிமை... ராமநவமிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு, குழந்தை ராமரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட பின்னர் வந்துள்ள முதல் ராமநவமி இதுவாகும் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.;

Update:2024-04-17 09:46 IST

புதுடெல்லி,

உத்தர பிரதேசத்தின் அயோத்தி நகரில் பல தடைகளை கடந்து ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. நடப்பு ஆண்டின் ஜனவரியில் இதற்கான கும்பாபிஷேக விழாவும் நடத்தி முடிக்கப்பட்டது. இதற்காக நாடு முழுவதிலும் இருந்து சாமியார்கள், பூசாரிகள் வரவழைக்கப்பட்டனர். பல முக்கிய பிரமுகர்களும் விழாவில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், நாடு முழுவதும் ராமநவமி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

இதுபற்றி அவர் வெளியிட்டு உள்ள எக்ஸ் சமூக ஊடக பதிவில், அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு, குழந்தை ராமரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட பின்னர் வந்துள்ள முதல் ராமநவமி இதுவாகும்.

ராமநவமி கொண்டாட்டத்தில் ஈடு, இணையற்ற மகிழ்ச்சியில் அயோத்தி நகரம் இன்று நிறைந்துள்ளது. 5 நூற்றாண்டுகளுக்கு பின்னர், அயோத்தியில் இந்த வகையில் ராமநவமியை கொண்டாடும் சிறப்புரிமையை நாம் பெற்றுள்ளோம் என்று அவர் அதில் தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று அவருடைய மற்றொரு பதிவில், அயோத்தியில் ராமர் சிலை நிறுவிய பின்னர் வரும் முதல் ராமநவமியானது, பல தலைமுறைகளை கடந்து மைல்கல்லை எட்டியுள்ளது. பல நூற்றாண்டுகளின் அர்ப்பணிப்பை ஒன்றிணைத்து, நம்பிக்கை மற்றும் வளர்ச்சிக்கான ஒரு புதிய சகாப்தம் உருவாகி உள்ளது.

இந்த நாளுக்காகவே கோடிக்கணக்கான இந்தியர்கள் காத்திருந்தனர். இந்த புனித நிகழ்வுக்காக எண்ணற்ற மக்கள் தங்களுடைய இன்னுயிரை ஈந்தனர். கடவுள் ஸ்ரீராமரின் ஆசிகள் எப்போதும் நம்முடனேயே தொடர்ந்து இருக்கும்.

நீதி மற்றும் அமைதியை நோக்கி நம்மை வழிநடத்தி செல்லும். நம்முடைய வாழ்வை ஞானம் மற்றும் தைரியத்துடன் ஒளி பெற செய்யும் என்று அவர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்