தேசிய பாதுகாப்பு, போதைப்பொருள் கடத்தல் தடுப்பு குறித்து ஆலோசனை

உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) தென்மண்டல மாநாடு பெங்களூருவில் நடக்கிறது.;

Update:2023-03-24 00:15 IST

பெங்களூரு:-

அமித்ஷா வருகிறார்

உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் தென்மண்டல மாநாடு பெங்களூருவில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. காலை 10.30 மணிக்கு தாஜ் வெஸ்ட் என்ட் ஓட்டலில் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட தென்இந்திய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். இதில் தேசிய பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.

அந்த கூட்டத்தை முடித்து கொண்டு அவர் பகல் 3.30 மணிக்கு பெங்களூரு அருகே உள்ள கொம்மகட்டா கிராமத்தில் நடைபெறும் சகக்கார் சம்ரித்தி சவுத் கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் அவர் கலந்து கொள்கிறார்.

தேர்தல் குறித்து ஆலோசனை

முன்னதாக அமித்ஷா, எடியூரப்பாவின் காவேரி இல்லத்திற்கு வருகிறார். எடியூரப்பாவுடன் சேர்ந்து காலை சிற்றுண்டியை சாப்பிடுகிறார். அப்போது கர்நாடக சட்டசபையின் தேர்தல் நிலவரம், பிரசார பொதுக்கூட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.

அமித்ஷா கட்சி கூட்டங்களில் கலந்து கொள்வது குறித்து சுற்றுப்பயண விவர குறிப்பில் குறிப்பிடவில்லை. ஆனால் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்ளிட்ட கட்சியின் முன்னணி தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போலீஸ் பாதுகாப்பு

உள்துறை மந்திரி அமித்ஷா வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் பிறகு ஒரு நாள் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு அவர் எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு சென்று அங்கிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு செல்ல உள்ளார்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமித்ஷா நேற்று இரவு தனி விமானம் மூலம் பெங்களூரு வந்தார். அவர் ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கினார். இதையொட்டி அந்த ஓட்டலை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்