'டுவிட்டர்' நிறுவன மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
மத்திய அரசு வக்கீல் காலஅவகாசம் கேட்டதை அடுத்து டுவிட்டர் நிறுவனத்தின் மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
பெங்களூரு:-
சட்ட நடவடிக்கை
மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை, ஆட்சேபகரமான பதிவுகளை வெளியிடும் கணக்குகளை முடக்க வேண்டும் என்று டுவிட்டர் நிறுவனத்திற்கு கடந்த 2022-ம் ஆண்டு உத்தரவிட்டது. மேலும் அதற்காக அந்த நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டது. இதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் டுவிட்டர் நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த மனு ஐகோர்ட்டில் நீதிபதி கிருஷ்ண தீட்சித் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன் ஆஜராகி, சொலிசிட்டர் ஜெனரல் வேறு ஒரு வழக்கில் ஆஜராக சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றுள்ளதாகவும், அதனால் வழக்கின் விசாரணையை வருகிற பிப்ரவரி மாதம் 7-ந் தேதிக்கு ஒத்திவைக்குமாறும் காலஅவகாசம் கோரினார்.
விசாரணை ஒத்திவைப்பு
இதை டுவிட்டர் நிறுவன வக்கீலும் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, இந்த மனு மீதான விசாரணை பிப்ரவரி மாதம் 7-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த மனு கடைசியாக கடந்த 9-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போதும், மத்திய அரசு வக்கீல் கேட்டுக் கொண்டதை அடுத்து விசாரணை ஏதும் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.