'75 நாள் இலவசம்' திட்டத்தில் 9½ கோடி பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது

18 வயதை தாண்டியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி 75 நாட்கள் இலவசம் என்ற திட்டத்தில் கடந்த 42 நாட்களில் 9½ கோடி பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Update: 2022-08-26 19:29 GMT

புதுடெல்லி,

நாட்டில் 65 வயதை தாண்டியவர்களுக்கும், முன்கள, சுகாதார பணியாளர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வந்தது. இந்தநிலையில், சுதந்திர தின அமுத பெருவிழாவையொட்டி, 75 நாட்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசம் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.

கடந்த ஜூலை 15-ந் தேதி தொடங்கிய இத்திட்டம், செப்டம்பர் 30-ந் தேதிவரை அமலில் இருக்கும். இதற்காக நாடு முழுவதும் பஸ், ரெயில் நிலையங்கள், விமான நிலையங்கள், பள்ளி, கல்லூரிகள், மத வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைத்து பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்த திட்டம் தொடங்கி, நேற்று 42-வது நாள் ஆகும். இந்த 42 நாட்களில் 9 கோடியே 60 லட்சம் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.மொத்தத்தில் இதுவரை 14 கோடியே 70 லட்சம் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்த திட்டம் தொடங்குவதற்கு முன்பு நாள் ஒன்றுக்கு 11 லட்சத்து 40 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தது. அது சராசரியாக 27 லட்சத்து 77 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அதுபோல், நாள் ஒன்றுக்கு சராசரியாக செலுத்தப்படும் பூஸ்டர் தடுப்பூசிகள் 22 லட்சத்தை கடந்துள்ளது.

விழிப்புணர்வு பிரசாரத்தால் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது அதிகரித்து இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. பிரதமர் மோடியின் உறுதியான, முற்போக்கான தலைமையின் கீழ் நாட்டின் கூட்டு மனஉறுதியை இது காட்டுவதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் முன்னேற்றத்தை அவர் உன்னிப்பாக கண்காணித்து வந்தார்.

இதற்கிடையே, பூஸ்டர் தடுப்பூசிக்கு அனுமதிக்கப்பட்ட தடுப்பூசிகள் பட்டியலில் 'கோர்பேவேக்ஸ்' சேர்க்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்