தேசிய நெடுஞ்சாலையில் கூடுதல் டி.ஜி.பி. அலோக்குமார் ஆய்வு

தொடர் விபத்துகளால் வாகன ஓட்டிகள் பலியாகி வருவதால், தேசிய நெடுஞ்சாலைகளில் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அலோக்குமார் ஆலோசனை நடத்தினார்.

Update: 2023-08-02 21:30 GMT

பெங்களூரு:-

அலோக்குமார் ஆய்வு

பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பலியானதை தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான பணிகளை மாநில போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பிரிவு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அலோக்குமார் மேற்பார்வையிட்டு வருகிறார். இதுபோல், பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் உள்ள நெலமங்களா-துமகூரு ரோடு, துமகூரு மாவட்டத்தில் உள்ள பெங்களூரு-புனே தேசிய நெடுஞ்சாலைகளிலும் தொடர் விபத்துகள் நடந்து வாகன ஓட்டிகள் பலியாகி வருகின்றனர்.

இதையடுத்து, நேற்று காலையில் பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களாவுக்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அலோக்குமார் சென்றார். பின்னர் அவர், நெலமங்களா-துமகூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆய்வு நடத்தினார். பின்னர் போலீஸ் அதிகாரிகளுடன் விபத்துகள் நடப்பதற்கான காரணம், இதுவரை எத்தனை பேர் உயிர் இழந்துள்ளனர் உள்ளிட்ட தகவல்களை கேட்டு அவர் அறிந்தார். அதுபோல், பெங்களூரு-புனே தேசிய நெடுஞ்சாலையிலும் கூடுதல் டி.ஜி.பி. அலோக்குமார் ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அறிவிப்பு பலகை வைக்க...

பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் சமீபகாலமாக விபத்துகள் நடப்பது அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நெலமங்களா-துமகூரு தேசிய நெடுஞ்சாலையில் 49 பேர் விபத்தில் பலியாகி உள்ளனர். மாநிலத்தில் அதிகஅளவு நடந்த விபத்துகளில் பெங்களூரு புறநகருக்கு 2-வது இடம் கிடைத்திருக்கிறது.

நெலமங்களா-துமகூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இங்கு விபத்துகள் நடப்பதற்கான காரணங்களும் தெரியவந்துள்ளது. அதனை சரி செய்யும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறேன். தேசிய நெடுஞ்சாலையில் 50 மீட்டர் இடைவெளியில் அறிவிப்பு பலகை வைக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

750 வாகன ஓட்டிகள் சாவு

துமகூரு புறநகரில் அமைந்துள்ள பெங்களூரு-புனே தேசிய நெடுஞ்சாலையிலும் கடந்த ஒரு ஆண்டில் விபத்தில் சிக்கி 750 பேர் பலியாகி உள்ளனர். இந்த சாலையில் விபத்துகளை தடுக்க தேவையான முன் எச்சரிக்கை நடவடிககைகள் எடுக்கப்படும்.

வாகனங்களின் வேகங்கள் கண்டறியப்பட்டு, விபத்துகள் நடைபெறுவது தடுக்கப்படும். வாகன ஓட்டிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். குறிப்பாக சுங்கச்சாவடிகளை சுற்றியுள்ள சாலை, அங்கு நிலவும் சூழ்நிலை குறித்து தகவல் சேகரிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்