நடப்பு ஆண்டில் அதிக லாபம் ஈட்டியவர்களில் அதானிக்கு முதலிடம்: போர்ப்ஸ் இந்தியா தகவல்

கவுதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு ரூ.9 லட்சத்து 75 ஆயிரத்து 993 கோடியாக உள்ளது.

Update: 2024-10-12 16:41 GMT

புதுடெல்லி,

2024-ம் ஆண்டுக்கான இந்தியாவின் பணக்காரர்கள் பற்றிய பட்டியல் ஒன்றை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இதன்படி, நடப்பு ஆண்டில் இந்தியாவில் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி அதிக லாபம் ஈட்டியவராக இருக்கிறார்.

அவருக்கு, முந்தின ஆண்டை விட ரூ.4 லட்சத்து 3 ஆயிரத்து 859 கோடி அதிக லாபம் கிடைத்திருக்கிறது. இதனால், அவருடைய நிகர சொத்து மதிப்பு ரூ.9 லட்சத்து 75 ஆயிரத்து 993 கோடியாக உள்ளது. ஓராண்டில் எந்தவொரு இந்தியரும் இதுவரை ஈட்டியிராத அதிக லாபம் இவருக்கு கிடைத்திருக்கிறது.

இந்த சொத்து அதிகரிப்பானது, இந்த வரிசையில் டாப் 3 இடம் வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் மற்றும் மேலாண் இயக்குநரான முகேஷ் அம்பானி மற்றும் அவருக்கு அடுத்து உள்ள ஓ.பி. ஜிண்டால் குழும தலைவர் சாவித்ரி ஜிண்டால் ஆகிய இருவருக்கும் கிடைத்த ஒட்டுமொத்த லாப தொகையை விட அதிகம் ஆகும்.

இந்த பட்டியலில், 2-வது அதிக லாபம் ஈட்டியவராக முகேஷ் அம்பானி உள்ளார். அவருக்கு 2024-ம் ஆண்டில் ரூ.2 லட்சத்து 31 ஆயிரத்து 377 கோடி லாபம் கிடைத்திருக்கிறது. இதனால், அவருடைய நிகர சொத்து மதிப்பு ரூ.10 லட்சத்து 5 ஆயிரத்து 441 கோடியாக உள்ளது. இதனால், இந்திய பணக்காரர்களுக்கான போர்ப்ஸ் பட்டியலில் அவர் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார்.

3-வது இடம் வகிக்கும் சாவித்ரி ஜிண்டாலுக்கு ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்து 750 கோடி அதிக லாபம் கிடைத்திருக்கிறது. இவர் இந்தியாவின் பணக்கார பெண் மற்றும் ஹிசார் தொகுதியின் எம்.எல்.ஏ.வாகவும் இருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்