5ஜி ஏலம்: ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா உடன் மோதும் அதானி..?

5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் அதானியும் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2022-07-09 10:16 GMT

புதுடெல்லி,

5ஜி சேவையை கைபற்றுவதற்கான ஏலம் ஜூலை 26-ம் தேதி நடைபெறுகிறது. ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் அம்பானியின் ஜியோ நிறுவனமும், மிட்டலின் ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் போட்டியிடும் நிலையில் தற்போது திடீர் திருப்பமாக அதானியும் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிய கண்டத்தின் நம்பர் 1 பணக்காரர் என்ற அந்தஸ்தை பிடிப்பதில் அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானி ஆகிய இருவருக்கு இடையிலும் போட்டி நிலவுகிறது.

இந்தபோட்டி ஒருபுறம் இருக்கையில் இருவருமே புதிய தொழில்களை தொடங்கி தங்கள் சாம்ராஜியத்தை விரிவுபடுத்தி வருகின்றனர். இருவரும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் ஆவர்.

5ஜி அலைக்கறைக்கான ஏலத்துக்கு அண்மையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. அதன்படி வரும் 26-ம் தேதி ஏலம் நடைபெறுகிறது. இதில் 20 ஆண்டுகளுக்கு 73 ஜிகாஹெட்ஸ் அலைக்கற்றை ஏலம் விடப்படுகிறது. ஏலத்தின் போது மொத்தம் 72,097.85 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் குறைந்தபட்சம் ரூ.4.3 லட்சம் கோடி மதிப்பில் வைக்கப்படும்.

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ளன. இதில் ஜியோ முகேஷ் அம்பானியின் நிறுவனம். ஏர்டெல் சுனில் பார்தி மிட்டலின் நிறுவனமாகும்.

இதனிடையே நான்காவது விண்ணப்பதாரர் அதானி குழுமம் இந்த ஏலத்தில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே 5ஜி ஏலத்திலும் இருவரிடையே போட்டி ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்