புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்க சம்மதம்
நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த் சம்மதம் தெரிவித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
பெங்களூரு: நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த் சம்மதம் தெரிவித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
கடிதம்
நடிகர் ரஜினிகாந்த் சம்மதம் தெரிவித்து முதல் மந்திரி பசவராஜ் பொம்மைக்கு நேற்று கடிதம் எழுதி அனுப்பி வைத்துள்ளார்.
அந்த கடிதத்தில், 'பெங்களூரு விதான சவுதாவில் வருகிற 1-ம் தேதி நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் வாய்ப்பை வழங்குவதற்காக எனது இதய பூர்வ நன்றியை உங்களது அரசுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். விருது வழங்கும் நிகழ்ச்சியில் நான் பங்கேற்பதை உறுதி செய்து கொள்கிறேன். வருகிற 1-ம் தேதி மதியம் 2 மணியளவில் சென்னையிலிருந்து புறப்பட்டு மதியம் 3 மணியளவில் பெங்களூரு வந்து சேர உள்ளேன், என்று கூறியுள்ளார்.
மந்திரி அசோக் பேட்டி
இதுதொடர்பாக பெங்களூரு விதானசவுதாவில் நேற்று வருவாய்த்துறை மந்திரி அசோக் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்த புனித் ராஜ்குமார் மரணம் அடைந்து ஓராண்டு நிறைவு பெற்றிருக்கிறது. அவர் கன்னட சினிமா உலகில் செய்த சாதனைகளை கருத்தில் கொண்டு கர்நாடக ரத்னா விருது வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி, வருகிற 1-ந் தேதி கர்நாடக ராஜ்யோத்சவா தினத்தில் விதானசவுதாவில் நடைபெறும் விழாவில் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கப்படுகிறத.
2009-ம் ஆண்டுக்கு பின்பு இந்த விருது வழங்கப்படாமல் இருந்தது. தற்போது புனித் ராஜ்குமாருக்கு வழங்கப்படுகிறது. இதற்காக 5 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் வசதியாக பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கன்ன வளர்ச்சி மற்றும் கலாச்சார துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள். விதானசவுதா முன்பாக உள்ள படிகட்டுகளில் மாலை 4 மணியில் இருந்து 6 மணிவரை நடைபெற உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த்
புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கும் விழா கால காலத்திற்கும் நினைவில் இருக்க வேண்டும் என்பது முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை விரும்புகிறார். விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க நடிகர் ரஜினிகாந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் சிறப்பு விருந்தினராக பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் கர்நாடகத்தில் பிறந்து, அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றியவர்.
தற்போது உலகில் புகழ் பெற்ற நடிகராக இருக்கும் ரஜினிகாந்த், கர்நாடக ரத்னா விருது வழங்கும் விழாவில் பங்கேற்க ஒப்புக் கொண்டுள்ளார். இதுபோல், பிரபல நடிகர் ஜுனியர் என்.டி.ஆரும் கர்நாடக ரத்னா விருது வழங்கும் விழாவில் பங்கேற்கிறார். புனித் ராஜ்குமாரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி பாட புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரைவில் முடிவு செய்யப்படும்.
இவ்வாறு மந்திரி அசோக் கூறினார்.