நடிகர் நாகபூஷனின் கார் மோதி பெண் பலி

பெங்களூருவில் கன்னட நடிகர் நாகபூஷன் ஓட்டிச் சென்ற கார் மோதி நடைபயிற்சி சென்ற பெண் உயிரிழந்தார். அவரது கணவர் பலத்த காயம் அடைந்தார். நடிகர் நாகபூஷனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-10-01 18:45 GMT

பெங்களூரு:-

நடிகர் கார் மோதி பெண் பலி

கன்னட நடிகராக இருந்து வருபவர் நாகபூஷன். இவர், பெங்களூரு ஜே.பி.நகர் பகுதியில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வெளியே சென்றுவிட்டு தனது காரில் நாகபூஷன் வீட்டுக்கு புறப்பட்டார். இரவு 9.45 மணியளவில் கோனனகுன்டே கிராஸ், வசந்தபுராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நடிகர் நாகபூஷன் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் சென்ற ஒரு தம்பதி மீது அவரது கார் மோதியது. இதில் தம்பதி தூக்கி வீசப்பட்டனர்.

அதே நேரத்தில் தம்பதி மீது மோதிய கார், அங்கிருந்த நடைபாதையின் மீது ஏறி மின் கம்பத்தில் மோதி நின்றது. இதில், காரின் முன்பகுதியும் சேதம் அடைந்தது. இந்த நிலையில், படுகாயம் அடைந்த தம்பதியை மீட்டு நடிகர் நாகபூஷன் மற்றும் அங்கிருந்தவர்கள் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெண் பலியானார். அவரது கணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நடிகர் நாகபூஷன் கைது

இதுபற்றி தகவல் அறிந்ததும் குமாரசாமி லே-அவுட் போலீசார் சம்பவ இடத்திற்கும், ஆஸ்பத்திரிக்கும் சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது அந்த தம்பதி வசந்தபுராவை சேர்ந்த கிருஷ்ணா (வயது 56), அவரது மனைவி பிரேமா (48) என்று தெரிந்தது. இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே நடைபயற்சி செய்த போது நடிகர் நாகபூஷன் கார் மோதியதில், பிரேமா பலியானதும், கிருஷ்ணா படுகாயம் அடைந்ததும் தெரியவந்தது.

அதே நேரத்தில் நடிகர் நாகபூஷன், ஆர்.ஆர்.நகரில் வசிக்கும் தனது நண்பர்களை பார்த்து விட்டு ஜே.பி.நகரில் உள்ள வீட்டுக்கு வரும் போது, கார் அவரது கட்டுப்பாட்டை இழந்து தம்பதி மீது மோதியது தெரியவந்தது. நாகபூஷன் அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டியதே விபத்திற்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, நடிகர் நாகபூஷனை குமாரசாமி லே-அவுட் போக்குவரத்து போலீசார் கைது செய்தார்கள்.

மதுஅருந்தவில்லை

விபத்து குறித்து போலீசாரிடம் நடிகர் நாகபூஷன் அளித்த வாக்குமூலத்தில், ஆர்.ஆர்.நகரில் உள்ள தனது நண்பர்களை பார்த்து விட்டு வீட்டுக்கு வரும் போது வசந்தபுரா பகுதியில் நடைபாதையில் சென்று கொண்டிருந்த தம்பதி திடீரென்று சாலைக்கு நடுவே வந்து விட்டதால் கார் தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதி விட்டது. தனது கார் பழுதாகி விட்டதால், ஆட்டோவில் அழைத்து சென்று தம்பதியை ஆஸ்பத்திரியில் அனுமதித்ததாக தெரிவித்தார்.

நடிகர் நாகபூஷன் மது

அருந்தவில்லை என்றும், விபத்து காரணமாக கைதான அவரை போலீஸ் நிலைய ஜாமீனில் விடுவித்துள்ளதாகவும் துணை போலீஸ் கமிஷனர் சிவபிரசாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நடிகர் நாகபூஷன் மீது குமாரசாமி லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரது கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வருகிற 3-ந் தேதி (நாளை) விசாரணைக்கு ஆஜராகும்படி நாகபூஷனுக்கு போலீசார் நோட்டீசு கொடுத்துள்ளனர்.

பெண்ணின் கண்கள் தானம்

நடிகர் நாகபூஷன் கார் மோதியதில் பிரேமா பலியானார். அவரது உடலை பார்த்து மகள் யசஷ்வினி, மகன் கதறி அழுதார்கள். தாய் இறந்த துக்கத்திலும், அவரது 2 கண்களையும் தானம் செய்வதாக அறிவித்தனர். இதையடுத்து, பிரேமாவின்

2 கண்களும் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டு தானம் செய்யப்பட்டது. தனது மகளுக்கு பிரேமா திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்திருந்தார். அதற்குள் பிரேமா உயிரிழந்து விட்டதாக கூறி யசஷ்வினி கதறி அழுத காட்சி கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்