பா.ஜனதா பிரசார பாடல் குறித்து நடிகர் சந்தன் ஷெட்டி கருத்து
பா.ஜனதா பிரசார பாடலுக்கு இசை அமைத்து பாடிய நடிகர் சந்தன் ஷெட்டி கருத்து தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:-
பா.ஜனதா பிரசார பாடல்
சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதாவின் பிரசாரத்தில் சந்தன் ஷெட்டி இசை அமைத்து பாடிய கனா கண்டு பா.ஜனதா.... என்ற பிரசார பாடல் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்து வருகிறது. இதுகுறித்து நடிகரும், இசை அமைப்பாளருமான சந்தன் ஷெட்டி கூறியதாவது:-
கர்நாடக பா.ஜனதா அலுவலகத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. உங்களுக்கே உரிய பாணியில் இளமை கலந்த பிரசார பாடலை உருவாக்குங்கள் என்றனர். பாடல் ஆற்றல் மிகுந்ததாகவும், துள்ளலாகவும் இருக்க வேண்டும் என்று கூறினர். இதனால் ஒரு நாள் லீவு போட்டு என் குருக்கள், நல விரும்பிகள், குடும்ப உறுப்பினர்கள் எல்லோருடனும் பேசி அவர்களின் ஆலோசனையின் பேரில் பா.ஜனதா பிரசார பாடலை உருவாக்கினேன்.
பிரதமர் மோடி
பாடலில் உள்ள அனைத்து வரிகளும் என்னுடையது அல்ல. பாடலில் இதுபோன்ற விஷயங்கள் இருக்க வேண்டும், என்னென்ன பெயர்கள் இருக்க வேண்டும், என்னென்ன திட்டங்களை குறிப்பிட வேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள். என் இசை மீட்டரில் (மீட்டர் என்பது பாடல் இசையில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப சொல்) அவர்கள் சொன்ன வார்த்தைகளை கொஞ்சம் மாற்றி என் சொந்த வார்த்தைகளை பயன்படுத்தி பாடலை உருவாக்கினேன்.
ஆனால் பாடலின் வீடியோவில்
பயன்படுத்தப்பட்ட படங்கள், வீடியோ காட்சிகளை நான் சேர்க்கவில்லை. அதனை பா.ஜனதாவினர் சேர்த்துள்ளனர். இந்த பாடல் பா.ஜனதா தலைவர்களுக்கு பிடித்து போய்விட்டது. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு மிகவும் இந்த பாடல் பிடித்தது. அவருடன் தேர்தல் பிரசார ஊர்வலத்தில் ஈடுபட்ட போது நான் லைவ் ஆக பா.ஜனதா பிரசார பாடலை பாடினேன். அதுபோல் பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் நான் பாடிக்கொடுத்த பா.ஜனதாவின் பிரசார பாடலை பதிவேற்றம் செய்துள்ளார்.
எதிர்ப்புகள்
பா.ஜனதாவுக்கு பிரசார பாடலுக்கு இசைஅமைத்து கொடுத்து பாடியதற்கு மற்ற கட்சிகளை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். என்னை பொறுத்தவரை நான் நேர்மையான நபர். நான் ஒரு பாடகர், இசை அமைப்பாளர். என் வேலை பாடல் இயற்றுவது. யார் கேட்டாலும் பாடல் அமைத்து கொடுத்து இருப்பேன்.
பா.ஜனதாவினர் முதலில் வந்து கேட்டனர். அதனால் அவர்களுக்கு பாடல் அமைத்து கொடுத்துள்ளேன். என்னை பற்றி அவதூறு பேசுபவர்களை நான் கண்டுகொள்வதில்லை. ஆனால் பிரதமர் மோடியின் செயல்பாடுகள் என்னை கவர்ந்து வருகிறது. நான் பா.ஜனதாவுக்காக பிரசார பாடல் பாட பிரதமர் மோடியும் ஒரு காரணம்.
மக்கள் சேவை செய்ய தயார்
இந்தியாவில் போர் பயம் இல்லை. இந்தியர்களை பெருமைப்படுத்தும் செயல்களை அவர் செய்து வருகிறார். நான் பொது சேவையில் ஈடுபாடு கொண்டவன். வாய்ப்புகளை வீணடிக்க கூடாது. எந்த வாய்ப்பையும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்ற லட்சியத்தை கொண்டவன். எனவே வாய்ப்பு கிடைத்தால் மக்களுக்கு சேவை செய்ய தயாராக உள்ளேன்.
அதற்காக எந்த கட்சியாவது எனக்கு வாய்ப்பு கொடுக்கும் என்பது அர்த்தமில்லை. கோட்பாடுகளும், கொள்கைகளும் முக்கியம். கட்சியின் கொள்கை அடிப்படையில் யாருக்கு ஆதரவு கொடுப்பது என்பது பற்றி முடிவு எடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.