திராவக வீச்சுக்கு ஆளான பெண்ணுக்கு அரசு வேலை

பெங்களூருவில் திராவக வீச்சுக்கு ஆளான பெண்ணுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உறுதியளித்துள்ளார்.

Update: 2022-11-01 18:45 GMT

பெங்களூரு:

பெங்களூருவில் திராவக வீச்சுக்கு ஆளான பெண்ணுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உறுதியளித்துள்ளார்.

அரசு வேலை

திராவக வீச்சுக்கு ஆளாகி காயம் அடைந்த பெண் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை பெங்களூருவில் நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது தனக்கு அரசு வேலை வழங்க வேண்டும், வீட்டு வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பசவராஜ் பொம்மை, அந்த பெண்ணுக்கு உடனடியாக அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கும்படி தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டார்.

மேலும் வீட்டு வசதித்துறை சார்பில் பெங்களூருவில் நிறுவப்படும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஒரு வீடு ஒதுக்கி கொடுப்பதாகவும் உறுதியளித்தார். அதன் பிறகு பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வாழ்க்கையை அர்ப்பணித்தார்

திராவக வீச்சு தாக்குதலுக்கு உள்ளான பெண், என்னை சந்தித்து சில கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரினார். திராவக வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு சார்பில் மாதாந்திர உதவித்தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்கு அரசு வேலை வழங்கப்படும். வீட்டு வசதித்துறை சார்பில் கட்டப்படும் வீடுகளில் ஒரு வீடு ஒதுக்கி கொடுக்கப்படும்.

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்குவது சிறப்பான விஷயம். கர்நாடக ராஜ்யோத்சவா விழா அன்றே இந்த விருது வழங்க வேண்டும் என்பது எனது விருப்பமாக இருந்தது. புனித் ராஜ்குமார் கன்னடத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். கன்னடம் மற்றும் அதன் அடையாளம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கண்கள் தானம்

திரைத்துறையில் சாதித்தது மட்டுமின்றி சமூக பணிகளையும் ஆற்றினார். இறப்புக்கு பிறகு தனது கண்களையும் தானம் செய்துள்ளார். இதன் மூலம் அவர் மற்றவர்களுக்கு முன்உதாரணமாக திகழ்ந்தார். அவரது செயலால் லட்சக்கணக்கான மக்கள் கண்களை, உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர். சிறு வயதிலேயே பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதற்காகவே அவருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்குகிறோம். பாடப்புத்தகங்களில் புனித் ராஜ்குமார் குறித்த பாடத்தை சேர்ப்பது குறித்து வரும் நாட்களில் முடிவு செய்யப்படும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்