வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த அரசு அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த மங்களூரு மாநகராட்சி சுகாதார அதிகாரிக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து மங்களூரு கோர்ட்டு தீர்ப்பளித்தது.;
பெங்களூரு;
சுகாதார அதிகாரி
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு மாநகராட்சியில் சுகாதார அதிகாரியாக பணியாற்றி வந்தவர் சிவலிங்க கொண்டாகுலி. இவர் அளவுக்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார்கள் எழுந்தன. அதன்பேரில் கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ந் தேதி இவரது வீடு மற்றும் அலுவலகங்களில் லோக் அயுக்தா அதிகாரிகள் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.76 லட்சம் மதிப்பிலான பணம், நகைகள், அசையும் மற்றும் அசையா சொத்துகளின் ஆவணங்களை கைப்பற்றினர்.
மேலும் அவர் மீது மங்களூரு 3-வது கூடுதல் மற்றும் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி ஜகாதி நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார்.
4 ஆண்டு சிறை
அவர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த குற்றத்திற்காக அதிகாரி சிவலிங்க கொண்டாகுலிக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.1 கோடி அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு சார்பில் வக்கீல் ரவீந்திரா முன்னிப்பாடி ஆஜரானார்.