வாடிக்கையாளர்கள் போல நடித்து நகைக்கடையில் ரூ.5 லட்சம் தங்கம் 'அபேஸ்'; பா்தா அணிந்து வந்த பெண்கள் கைவரிசை

பங்காருபேட்டையில் வாடிக்கையாளர்கள் போல நடித்து நகைக்கடையில் ரூ.5 லட்சம் தங்க நகைகளை பர்தா அணிந்து வந்த பெண்கள் அபேஸ் ெசய்தனர்.

Update: 2023-06-02 21:34 GMT

கோலார் தங்கவயல்:

தங்க நகைக்கடை

கோலார் மாவட்டம் பங்காருபேட்டை டவுனில் சந்தோஷ் என்பவருக்கு சொந்தமான மகாவீர் என்ற தங்க நகைக்கடை அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது நகைக்கடைக்கு பர்தா அணிந்து கொண்டு 5 பெண்கள் வந்துள்ளனர். அவர்கள் தங்க நகைகள் வாங்க வேண்டும் என்று உரிமையாளர் சந்தோசிடம் கூறி உள்ளனர். பின்னர் சந்தோஷ், ஊழியர் மூலம் வாடிக்கையாளர்களாக வந்த 5 பெண்களுக்கும் தங்க நகைகளை காண்பித்து கொண்டிருந்தார்.

ஏராளமான தங்க நகைகளை பார்வையிட்ட அவர்கள், எந்த நகையும் பிடிக்கவில்லை என்றும், வேறு கடைக்கு செல்வதாகவும் கூறிவிட்டு சென்றனர்.

ரூ.5 லட்சம் தங்கம் அபேஸ்

பின்னர் நகைக்கடை ஊழியர், அந்த பெண்களுக்கு காண்பித்த தங்க நகைகளை சரிபார்த்து கொண்டிருந்தார். அப்போது ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மாயமாகி இருந்தது. இதுகுறித்து அவர் உடனடியாக உரிமையாளர் சந்தோசுக்கு தெரிவித்தார். இதையடுத்து அவர், கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார். அப்போது அதில், வாடிக்கையாளர்கள் போல நடித்து பர்தா அணிந்து வந்த 5 பெண்கள் தான், ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை அபேஸ் செய்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் உடனடியாக பங்காருபேட்டை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

போலீஸ் வலைவீச்சு

பின்னர், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் பர்தா அணிந்து வந்த பெண்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் பங்காருபேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்