மடாதிபதி தற்கொலை வழக்கு: கல்லூரி மாணவி உள்பட 3 பேர் கைது

ராமநகர் அருகே, மடாதிபதி தற்கொலை வழக்கில் பெங்களூரு கல்லூரி மாணவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2022-10-30 21:29 GMT

ராமநகர்: ராமநகர் அருகே, மடாதிபதி தற்கொலை வழக்கில் பெங்களூரு கல்லூரி மாணவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

மடாதிபதி தற்கொலை

ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகா குதூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கஞ்சிகல் கிராமத்தில் பண்டே மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக இருந்து வந்தவர் பசவலிங்க சுவாமி (வயது 45). இந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு மடத்தில் வைத்து பசவலிங்க சுவாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய 3 பக்க கடிதம் போலீசாரிடம் சிக்கி இருந்தது.

அந்த கடிதத்தில் சிலர் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், தன்னை மிரட்டி வருவதாகவும், பண்டே மடத்தை கைப்பற்ற இன்னொரு மடத்தின் மடாதிபதி முயற்சி செய்வதாகவும் எழுதி வைத்து இருந்தார். மேலும் அந்த கடிதத்தில் 10-க்கும் மேற்பட்டோரின் பெயரை மடாதிபதி குறிப்பிட்டு இருந்தார்.

ஹனிடிராப் முறையில் மிரட்டல்

இதையடுத்து மடாதிபதி பயன்படுத்திய 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வுக்கு அனுப்பி வைத்து இருந்தனர். இதற்கிடையே வழக்கு விசாரணை குதூர் போலீஸ் நிலையத்தில் இருந்து மாகடி போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டு இருந்தது. மடாதிபதி தற்கொலை சம்பவம் குறித்து மாகடி போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ஹனிடிராப் முறையில் மிரட்டப்பட்டதால் மடாதிபதி தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதனால் மடாதிபதியை மிரட்டி தற்கொலை செய்ய வைத்தவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

இதற்கிடையே மடாதிபதி பசவலிங்க சுவாமி ஆபாசமாக இருக்கும் 2 வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகின. அதில் 2-வது வீடியோவில் ஒரு இளம்பெண்ணின் முகம் தெரிந்து இருந்தது. இதனால் அந்த இளம்பெண் தான் மடாதிபதியை மிரட்டியதும் தெரிந்தது. அந்த இளம்பெண் பெங்களூருவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.

என்ஜினீயரிங் மாணவி கைது

இந்த நிலையில் மடாதிபதி தற்கொலை வழக்கு தொடர்பாக பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புராவை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவியான நீலாம்பிகா என்கிற சந்து (வயது 21) என்பவரை நேற்று காலை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மடாதிபதி ஒருவர் கூறியதன்பேரில் பசவலிங்க சுவாமியிடம் வாட்ஸ்-அப்பில் வீடியோ கால் பேசியதாகவும், அப்போது மடாதிபதி ஆபாசமாக இருந்த காட்சிகளை வீடியோ எடுத்ததாகவும் கூறி இருந்தார்.

அவர் கொடுத்த தகவலின்பேரில் மாகடியில் உள்ள கண்ணூர் மடத்தின் மடாதிபதியான மிருதனஞ்ஜெய சுவாமி மற்றும் துமகூருவை சேர்ந்த வக்கீலான மகாதேவய்யா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் 3 பேரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. அதாவது பசவலிங்க சுவாமியும், மிருதனஞ்ஜெய சுவாமியும் உறவு முறையில் அண்ணன்-தம்பி ஆவார்கள். இவர்கள் 2 பேருக்கும் இடையே பல ஆண்டுகளாக குடும்ப சொத்தை பிரிக்கும் விவகாரத்தில் தகராறு இருந்து வந்து உள்ளது.

நெருங்கிய தொடர்பு

இதுதொடர்பான வழக்கு கோர்ட்டிலும் நிலுவையில் உள்ளது. மேலும் அதிக சொத்துகளை கொண்ட பண்டே மடத்தின் மடாதிபதியாக இளம் வயதிலேயே பசவலிங்க சுவாமி பொறுப்பு ஏற்று இருந்தார். இதனை மிருதனஞ்ஜெய சுவாமியால் சகித்து கொள்ள முடியவில்லை. பண்டே மடத்தின் பொறுப்பை தன்னிடம் ஒப்படைத்து விடும்படி மிருதனஞ்ஜெய சுவாமி, பசவலிங்க சுவாமியிடம் கூறி உள்ளார். ஆனால் இதற்கு பசவலிங்க சுவாமி மறுத்து விட்டார். இதுபோல துமகூருவில் சித்தகங்கா மடம் உள்ளது. இந்த மடத்துடன் பசவலிங்க சுவாமிக்கு நெருங்கிய தொடர்பு இருந்து உள்ளது.

இதையும் மிருதனஞ்ஜெய சுவாமியால் பொறுத்து கொள்ள முடியவில்லை. இதனால் பண்டே மடத்தின் மடாதிபதி பதவியில் இருந்து பசவலிங்க சுவாமியை எப்படியாவது இறக்கி விட வேண்டும் என்று மிருதனஞ்ஜெய சுவாமி நினைத்து உள்ளார். இதுபற்றி அவர் தனது ஆதரவாளரும், வக்கீலுமான மகாதேவய்யாவிடம் கூறி உள்ளார். அவரும் இதற்கு ஒப்புக்கொண்டார். இதற்கு காரணம் மகாதேவய்யாவுக்கும், பசவலிங்க சுவாமிக்கும் இடையே இருந்த பிரச்சினை தான்.

பதவியில் இருந்து இறக்க...

அதாவது மகாதேவய்யா துமகூருவில் உள்ள சித்தகங்கா மடத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். அவர் பள்ளியில் ஆசிரியராக இருக்கும் போது ஒரு முறை அந்த பள்ளிக்கு பசவலிங்க சுவாமி சென்று உள்ளார். அப்போது குழந்தைகளுக்கு சரியாக பாடம் நடத்த வேண்டும் என்று மகாதேவய்யாவிடம், பசவலிங்க சுவாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக மகாதேவய்யா, பசவலிங்க சுவாமியிடம் வாக்குவாதம் செய்து உள்ளார்.

இந்த விவகாரத்தில் 2 பேருக்கும் இடையே பிரச்சினை இருந்து உள்ளது. இதனால் பசவலிங்க சுவாமியை மடாதிபதி பதவியில் இருந்து இறக்க உதவி செய்வதாக மிருதனஞ்ஜெய சுவாமியிடம், மகாதேவய்யா கூறியுள்ளார். பசவலிங்க சுவாமியை மடாதிபதி பதவியில் இருந்து இறக்க 2 பேரும் கையில் எடுத்த ஆயுதம் தான் ஹனிடிராப். ஹனிடிராப் முறையில் பசவலிங்க சுவாமியை மிரட்டி அதன்மூலம் அவரை மடாதிபதி பதவியில் இருந்து இறக்கி விடலாம் என்று 2 பேரும் நினைத்தனர்.

இளம்பெண்ணுடன் பழக்கம்

இந்த திட்டத்திற்கு அவர்கள் பயன்படுத்திய ஆயுதம் தான் நீலாம்பிகா. தொட்டபள்ளாப்புராவை சேர்ந்த நீலாம்பிகாவின் பாட்டி வீடு துமகூருவில் உள்ள சித்தகங்கா மடத்தின் அருகே உள்ளது. இதனால் நீலாம்பிகா அடிக்கடி துமகூரு சென்று வந்து உள்ளார். அப்போது சித்தகங்கா மடத்தில் உள்ள மடாதிபதிகளுடன், நீலாம்பிகாவுக்கு பழக்கம் ஏற்பட்டு இருந்தது. இதுபோல நீலாம்பிகாவுக்கும், மடாதிபதி பசவலிங்க சுவாமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருந்தது.

இந்த நிலையில் ஒரு முறை மடாதிபதி பசவலிங்க சுவாமியிடம் பேசிக்கொண்டு இருந்த நீலாம்பிகா சித்தகங்கா மடத்தில் உள்ள சில மடாதிபதிகள் பற்றி அவதூறாக பேசியுள்ளார். இதனை பசவலிங்க சுவாமி வீடியோ எடுத்து சித்தகங்கா மடத்தில் உள்ள மடாதிபதிகளுக்கு அனுப்பி உள்ளார். இதனால் நீலாம்பிகாவை, சித்தகங்கா மடத்தின் மடாதிபதிகள் எச்சரித்து உள்ளனர். இதனால் கடும் கோபம் அடைந்த நீலாம்பிகா, பசவலிங்க சுவாமியை பழி வாங்க முடிவு செய்து இருந்தார்.

6 மாதங்களாக மிரட்டல்

இதுபற்றி மிருதனஞ்ஜெய சுவாமி, மகாதேவய்யாவுக்கு தெரிந்தது. அவர்கள் 2 பேரும் நீலாம்பிகாவிடம், பசவலிங்க சுவாமியிடன் வாட்ஸ்-அப்பில் வீடியோ காலில் பேசும்படியும், அவரை நிர்வாணமாக புகைப்படம் எடுக்கும்படியும் கூறியுள்ளனர். அவர்கள் கூறியபடி பசவலிங்க சுவாமியுடன் வீடியோ காலில் பேசிய நீலாம்பிகை பசவலிங்க சுவாமியின் ஆபாச படங்களை எடுத்து அனுப்பி உள்ளார். அந்த புகைப்படங்களை மகாதேவய்யா எடிட்டிங் செய்து உள்ளார்.

இதையடுத்து பசவலிங்க சுவாமிக்கு அவரது ஆபாச படங்களை அனுப்பி வைத்து மிருதனஞ்ஜெய சுவாமி, மகாதேவய்யா ஆகியோர் மிரட்டி வந்து உள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு மேலாக மடாதிபதிக்கு மிரட்டல் விடுத்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் மனம் உடைந்த பசவலிங்க சுவாமி தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்து உள்ளது. இந்த நிலையில் கைதான 3 பேரையும் நேற்று மதியம் ராமநகர் கோர்ட்டு நீதிபதியின் வீட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

சிறையில் அடைப்பு

அப்போது மடாதிபதி மிருதனஞ்ஜெய சுவாமியை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மிருதனஞ்ஜெய சுவாமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்திய போலீசார் பின்னர் அவரை ராமநகர் சிறையில் அடைத்தனர். விசாரணைக்கு பிறகு மகாதேவய்யாவை ராமநகர் சிறையிலும், நீலாம்பிகாவை பெங்களூரு சிறையிலும் போலீசார் அடைத்தனர்.

மடாதிபதி தற்கொலை வழக்கில் கல்லூரி மாணவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மடாதிபதியின் 3-வது ஆபாச வீடியோ வெளியானது

ஹனிடிராப் முறையில் மிரட்டப்பட்டதால் மடாதிபதி பசவலிங்க சுவாமி தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்ட பின்னர் அவரது 2 ஆபாச வீடியோக்கள் வெளியாகின. இந்த வழக்கில் நேற்று கல்லூரி மாணவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து இருந்தனர்.

இதற்கிடையே மடாதிபதியின் 3-வது ஆபாச வீடியோவும் நேற்று வெளியானது. இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில் வீடியோ வெளியானது. இதனால் இந்த வழக்கில் வேறு சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்து உள்ளது. அவர்களை கைது செய்யவும் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்