டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி; ஷெல்லி ஒப்ராய் மேயராக தேர்வு

டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஒப்ராய் வெற்றிபெற்றுள்ளார்.

Update: 2023-02-22 09:22 GMT

டெல்லி,

250 இடங்களை கொண்ட டெல்லி மாநகராட்சிக்கு கடந்த மாதம் 4-ந்தேதி தேர்தல் நடந்தது. இது 3 மாநகராட்சிகள் ஒன்றிணைக்கப்பட்ட பின்னர் நடந்த முதல் தேர்தல் ஆகும்.

இந்த தேர்தலில் 134 இடங்களை ஆம் ஆத்மி கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. பாஜக 104 இடங்களில் மட்டுமே வென்றது. காங்கிரஸ் 9 இடங்கள் கிடைத்தன.

இதையடுத்து கவுன்சிலர்கள் பதவியேற்புக்கு பின் மேயர் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது. மேயர், துணை மேயர் பதவிகளுக்கு ஆம் ஆத்மி மற்றும் பாஜக இரு தரப்பும் வேட்பாளர்களை அறிவித்தது.

ஆனால், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் கவர்னரால் நியமிக்கப்பட்ட நியமன உறுப்பினர்கள் விவகாரம், மாமன்றத்தில் புயலை கிளப்பியது. கவர்னரால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு மேயர் தேர்தல், துணை மேயர் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உள்ளதா? என்பது தொடர்பாக ஏற்பட்ட மோதல் காரணமாக மேயர் தேர்தல் தொடர்ந்து 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே டெல்லி மேயர் தேர்தல் தொடர்பாக ஆம் ஆத்மி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, டெல்லி மேயர் தேர்தலில் கவர்னரால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது என உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை தொடர்ந்து டெல்லி மேயர் தேர்தலை பிப்ரவரி 22-ந்தேதி (இன்று) நடத்தும்படி டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான மாநில அரசு அளித்த பரிந்துரைக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து 3 முறை தள்ளிவைக்கப்பட்ட டெல்லி மேயர் தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 266 வாக்குகள் பதிவாகின. இதில், 150 வாக்குகள் பெற்று ஆம் ஆத்மி வேட்பாளர் ஷெல்லி ஒப்ராய் அபார வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ரேகா குப்தா 116 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

டெல்லி மேயர் தேர்தலில் வெற்றிபெற்ற ஆம் ஆத்மி வேட்பாளர் ஷெல்லி ஒப்ராய்க்கு அக்கட்சியின் தலைவரும் டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்