அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து கையெழுத்து இயக்கம் தொடங்கிய ஆம் ஆத்மி
அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது.
புதுடெல்லி,
டெல்லி அரசின் மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. தற்போது அவர் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட நாள் முதல், அவரது கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக கெஜ்ரிவாலின் கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சி நேற்று கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது. கெஜ்ரிவாலுக்கு மக்கள் தங்கள் செய்திகளை எழுதுவதற்காக லஜ்பத் நகரில் 2 வெள்ளை பலகைகள் வைக்கப்பட்டன.
ஜாங்புரா தொகுதியின் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பிரவீன் குமார் கையெழுத்து இயக்கம் குறித்து கூறுகையில், "டெல்லி மக்கள் தங்கள் முதல்-மந்திரியை நேசிக்கிறார்கள் என்பதை பா.ஜனதாவுக்கு காட்டுவதற்காக நகரின் பல்வேறு பகுதிகளில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும். நாங்கள் இந்த பிரசாரத்தை இங்கிருந்து தொடங்கினோம், அதை பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்வோம். இந்த கையெழுத்துகளை சேகரித்து பா.ஜனதாவுக்கு அனுப்புவோம், டெல்லி மக்கள் கெஜ்ரிவாலை எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதைக் காட்டுவோம்.
முதல்-மந்திரி கெஜ்ரிவாலை சிறையில் அடைத்த விதம் குறித்து டெல்லி மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். சர்வாதிகாரத்துக்கும், அவரது கைதுக்கு எதிராகவும் தங்கள் வாக்குகளால் மக்கள் பதிலளிப்பார்கள்" என்றார்.